Disqus Shortname

குடிநீர் குழாயில் உடைப்பு : கழிவுநீர் கலக்கும் அபாயம்!

உத்தரமேரூர்அக்,07
 உத்தரமேரூருக்கு செல்லும் குடிநீர் தரையடி குழாயில், மாகரல் அருகே கசிவு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் கல்வெட்டு உலக பிரசித்திப் பெற்றது.
 இதனால் இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து உத்தரமேரூரில் உள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டை பார்க்க அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
 இத்தனை பெருமை வாய்ந்த உத்தரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.  5 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட இப் பேரூராட்சிக்கு செய்யாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
 உத்தரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ள செய்யாற்றில் இருந்து ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் எடுக்கப்படுகிறது.  இவ்வாறு எடுக்கப்படும் குடிநீர் 13 கி.மீ. தூரத்துக்கு தரையடி குழாய் மூலம் உத்தரமேரூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
 தரையடி குழாயில் கசிவு: இவ்வாறு செல்லும் தரையடி குழாயில் மாகரலை அடுத்த சில கி.மீ. தூரத்தில் உள்ள மாந்தோப்புப் பகுதியில் தரையடி குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.  இதனால் உத்தரமேரூரில் குடிநீர் வழங்குவதில் அவ்வபோது சுணக்கம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.  பேரூராட்சி நிர்வாகம் இப்பகுதியில் உடைப்பை அவ்வபோது சரி செய்தாலும், ஆண்டுக்கு 365 நாள்களும் இப்பகுதியில் கசிவு மட்டும் நிற்பதில்லை.
 இதனால் இப்பகுதியில் எப்போதும் குட்டை போல் குடிநீர் தேங்கி நிற்பதை சாலையில் செல்லும்போது கவனிக்க முடியும். மேலும் இவ்வாறு தேங்கி இருக்கும் குட்டை கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாக உள்ளது.
 மேலும் அப்பகுதியில் இயற்கை உபாதை கழிப்பவர்கள் அக்குட்டையில் கால் கழுவிவிட்டு செல்வதும் வாடிக்கையாக உள்ளது.  ஏற்கெனவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாந்தி, வயிற்றுப்போக்கு, மர்மக் காய்ச்சல் பரவிவரும் நிலையில், இப்பகுதியில் தரையடி பைப்லைனில் ஏற்படும் கசிவை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 சுகாதாரத் துறை அதிகாரிகளும் ஏதேனும் ஒரு பகுதியில் மர்மநோய்கள் வந்த பிறகுதான் தங்களது சுறுசுறுப்பை காட்டுகின்றனர்.  எனவே பொதுமக்கள் பாதிப்படையும் முன்பு, இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
 தரையடி குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை முற்றிலுமாக தடுப்பதன் மூலம் குடிநீர் வீணாவதைத் தடுப்பதுடன், பொதுமக்களை மர்மநோய்களில் இருந்து காப்பாற்ற முடியும்.  எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பேரூராட்சிக்கு வேண்டிய உதவிகளை செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments