Disqus Shortname

உத்தரமேரூரில் உள்ள அரசு பள்ளிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு

உத்திரமேரூர், அக்,25 : 
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மற்றும் உத்தரமேரூரில் உள்ள அரசு பள்ளிகளில் ஆட்சியர் கா.பாஸ்கரன் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக கா.பாஸ்கரன் புதன்கிழமை பொறுப்பேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்திக்க மறுத்த அவர், எனது நடவடிக்கைகளை போக, போக தெரிந்து கொள்வீர்கள் என்று மட்டும் கூறினார். அதே போல், பதவியேற்ற முதல் நாளே ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் கா. பாஸ்கரன் வியாழக்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டார். மருத்துவமனையில், உள்ள வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் அதில் இருந்து சில விவரங்களை அவர் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து புறநோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, அறுவைச் சிகிச்சைக்கூடம், மருந்து கொடுக்கும் இடம், கண் பரிசோதனைக்கூடம், கண் உள்நோயாளிகள் சிகிச்சைக் கூடம் ஆகியவற்றை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் அங்குள்ள, நோயாளிகளிடம் மருத்துவம் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள சமையல் கூடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினார். சமையல் கூடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், தரமான பொருள்களில் உணவு சமைக்க வேண்டும் என்று அங்குள்ள சமையலர்களிடம் கேட்டுக் கொண்டார்.
ரேஷன் கடை ஆய்வு: இதைத் தொடர்ந்து உத்தரமேரூர் சென்ற ஆட்சியர் அங்கு சிறப்பு விரைவு பட்டா மாற்றம் முகாமில் கலந்து கொண்டார். அதையடுத்து உத்தரமேரூர், சோமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன்கடைகளை ஆய்வு செய்தார். அக்கடைகளில் அத்தியாவசிய பொருள்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள பொருள்களின் தரத்தை ஆய்வு செய்தார்.
பள்ளிகளில் ஆய்வு:  உத்தரமேரூர் ஆதி திராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு நடத்தினார். விடுதி வசதிகள் குறித்து விடுதி காப்பாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும் சோமநாதபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர், அங்கு மாணவர்களின் வாசிப்பு திறனை சோதித்து பார்த்தார். அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண் பெற ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அங்குள்ள சத்துணவுக் கூடத்தை ஆய்வு செய்த ஆட்சியர், மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

No comments