Disqus Shortname

உத்திரமேரூரில் புறவழிச்சாலை அமைக்க அரசு அனுமதி : நிலம் கையகப்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு

சென்னை அக்,18:
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, புறவழிச்சாலை அமைக்க, அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. நிலம் கையகப்படுத்த, ஏழு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தை அடுத்துள்ளது, உத்திரமேரூர். இங்கு பஸ் நிலையம் அருகே, புகழ் பெற்ற சுந்தர வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்; வாகனங்களை நிறுத்த வசதி இல்லை.
"போக்குவரத்து நெரிசலை குறைக்க, பஸ் நிலையத்தை, நகருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும்; புறவழிச்சாலை அமைக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள், நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர்.

அறிவிப்பு : கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், சூபோக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர் நகருக்கு, 4.20 கி.மீ., நீள புறவழிச்சாலை, வாலாஜாபாத் நகருக்கு, 3.40 கி.மீ., நீள புறவழிச்சாலை அமைக்க, திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நில எடுப்புப் பணி, 14.50 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்' எனக் கூறப்பட்டது. அதன்படி தற்போது, உத்திரமேரூரில் புறவழிச்சாலை அமைக்க, அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. புறவழிச்சாலை, உத்திரமேரூர் புக்கத்துறை சாலையில் உள்ள, ஏ.பி.,சத்திரத்தில் இருந்து பிரிந்து, மல்லிகாபுரம், உத்திரமேரூர் வழியாக சென்று, வேடபாளையம் ஏரி அருகே, வந்தவாசி சாலையில் இணையும். இச்சாலை அமைக்கப்பட்டால், செங்கல்பட்டில் இருந்து வந்தவாசி செல்லும் வாகனங்கள், உத்திரமேரூர் பஜார் வீதியில் செல்லாமல், புறவழிச்சாலை வழியே செல்ல முடியும்.
அதேபோல், காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் வரும் வாகனங்கள், உத்திரமேரூர் உள்ளே செல்லாமல், வேடந்தாங்கல், மதுராந்தகம், மேல்மருவத்தூர் பகுதிக்கு செல்ல முடியும்.
புறவழிச்சாலை அமைப்பதற்கு, தேவையான நிலங்களை கையகப்படுத்த, அரசு, ஏழு கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

No comments