Disqus Shortname

ஏரியில் கலங்கல் இருக்கு... நீர் வழிந்தோட கால்வாய் எங்கே?

 உத்தரமேரூர் அக்,18
காஞ்சிபுரம் அருகே ஆற்பாக்கம் ஏரியில் கலங்கல் பலமாக இருக்க அதில் இருந்து நீர் வழிந்தோட கால்வாய் எங்கே? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த உத்தரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டது ஆற்பாக்கம். இக்கிராமத்தில், 413 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித் துறை பராமரிப்பில் ஆற்பாக்கம் ஏரி அமைந்துள்ளது.
இந்த ஏரியின் பாசனத்தை நம்பி, 600 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இதில் பெரும்பாலும் நெல் பயிரிடப்படுவது வழக்கம்.
10 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம், மாமண்டூர் ஏரி நிரம்பி ஆற்பாக்கம் ஏரிக்கு, வரத்துக் கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது.
ஆற்பாக்கம் ஏரி நிரம்பி காவந்தண்டலம் வழியாக திருமுக்கூடல் பாலாற்றில் கலந்துவிடும். இந்த ஏரியை காஞ்சிபுரம் - உத்தரமேரூர் சாலை, 2-ஆக பிரிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக, இந்த ஏரி நிரம்பாததால், இப்பகுதியில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் தரிசாக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், தொடர்ந்து ஏரிக்கு மழைநீர் வரவில்லை என்ற காரணத்தைக் காட்டி ஏரி பராமரிப்பை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கைவிட்டுவிட்டார்கள்போல.
413 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி தூர்வாரப்படாமல், வேலிகாத்தான் மரங்களால் புதர் மண்டி காணப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் இருந்து உத்தரமேரூர் செல்லும் வழியில் வலது புறம் உள்ள ஆற்பாக்கம் ஏரி நீர் நிரம்பினால், ஏரியைப் பாதுகாக்கும் வகையில் மேல்பேரமநல்லூரைத் தாண்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட சிறு மேம்பாலத்துக்கு அருகே கலங்கல் உள்ளது.
அந்த கலங்களில் இருந்து தண்ணீர் வெளியேறும்போது சாலையை எளிதாகக் கடக்கத்தான் இந்தப் பகுதியில் ரூ. 50 லட்சம் செலவில் பாலம் அமைக்கப்பட்டது.
ஆனால் கலங்கலில் இருந்து வெளியேறும் தண்ணீர் பாலத்தைத் தாண்டினால், நேரடியாக விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் நிலைதான் உள்ளது.
இது குறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியது: "கலங்களில் இருந்து வெளியேறும் நீர் எங்கே செல்லும்? என்று அதிகாரிகளிடம், கேட்டால், மழைவரட்டும் பார்ப்போம்' என்று கூறுகின்றனர்.
ரூ. 50 லட்சத்தில் பாலத்தைக் கட்டும் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு, கலங்களில் இருந்து வெளியேறும் தண்ணீரை கடத்த கால்வாய் அமைக்க வேண்டும் என்று தெரியவில்லையா? 10 ஆண்டுகளாக ஏரி நிரம்பவில்லை என்பது உண்மையே.
ஒருவேளை இந்த ஆண்டு பருவமழையின்போது, கனமழை பெய்து, ஏரி நிரம்பினால், ஏரியில் இருந்து கலங்கல் வழியாக வெளியேறும் நீர் அருகில் உள்ள விளைநிலங்களைத்தான் முதலில் அழிக்கும்.
அதன்பிறகு கால்வாய் வெட்டினால் என்ன? வெட்டாவிட்டால் என்ன? என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

No comments