Disqus Shortname

உத்திரமேரூர் அருகே ரூ.17.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை திறப்பு பொது மக்களின் 10 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்

உத்திரமேரூர் 

உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கான நியாய விலைக்கடை பாழடைந்த கட்டிடம் ஒன்றில் செயல்பட்டு வந்தது. இந்த பாழடைந்த கட்டிடத்தில் பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரேஷன் பொருட்கள் மழைகாலங்களில் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகிவிடும். இதனால் பொது மக்கள் உரிய ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் அவதியடைந்து வந்தனர். எனவே பாழடைந்த கட்டிடத்தினை அகற்றி புதிய நியாயவிலைக் கடை கட்டிடம் தேவை என அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் க.சுந்தர் தனது சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17.59 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய நியாயவிலை கடை கட்டிடம் கட்ட அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நியாயவிலை கடை கட்டிடம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நேற்று நடைப்பெற்றது. உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி மன்றத் தலைவர் பொன்.சசிகுமார், கூட்டுறவு பண்டக சாலை வட்டார கள அலுவலர் கண்ணப்பன், மேளாளர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர் தனசேகரன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ, மற்றும் காஞ்சி எம்.பி. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நியாய விலைக் கடையினை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி ரேஷன் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினர். இதனைத் தொடர்ந்து கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. 10 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றிய திமுக அரசுக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments