Disqus Shortname

கோவில் தெப்ப உற்சவத்தில் மேளக்காரர்களை அனுமதிக்க கோரிக்கை!

உத்திரமேரூர்  அக்டோபர் 24,:
 
 உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் தெப்ப உற்சவத்தின் போது, மேளக்காரர்கள் தெப்பத்தில் அமரும் வழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என, கோவில் பணி செய்யும் மேளக்காரர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உத்திரமேரூரில் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, கடந்த 1978ம் ஆண்டு வரை தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வந்தது. 34 ஆண்டுகளுக்கு பின், கடந்த 2012ம் ஆண்டு தெப்ப உற்சவம் நடந்தது. தெப்ப உற்சவ விழாவின் போது வழக்கமாக தெப்பத்தில் அமர்ந்து அவரவர் பணியில் ஈடுபட கோவில் பணியாளர்கள், மேளக்காரர்கள் மற்றும் தெப்பம் செலுத்துவோர் ஆகியோர் முன் வந்த போது, மேளக்காரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை, உதவி ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த கோவில் மரபுப்படி தெப்பத்தில், பிராமணர்கள், பர்வதராஜகுலம் (செம்படவர்) மற்றும் மேளக்காரர்கள் அமர்ந்து செல்வர். இதில் செம்படவர் தெப்பத்திற்கு துடுப்பு போட்டு இயக்குவர். மேளக்காரர்கள் லாளி, ஒடம், நோட்டு, ஆனந்த பைரவி உள்ளிட்ட ராகங்களை இசைப்பர். இவை மரபாக நடந்த நிலையில், கடந்த ஆண்டு தெப்ப உற்சவத்தில் மேளக்காரர்கள் தெப்பத்தில் அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியரிடத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தெப்ப உற்சவத்தில், மேளக்காரர்கள் அமர்ந்து இசைக் கருவிகளை வாசிக்க வசதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments