Disqus Shortname

உத்திரமேரூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News_5030024052.jpgசட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு  9 பல்கலைக் கழகங்களில் விவேகானந்தர் பெயரில் கல்வி மையம்

சென்னை, மதுரை உள்ளிட்ட 9 பல்கலைக் கழகங்களில் விவேகானந்தர் பெயரில் உயர் ஆய்வு மற்றும் கல்வி மையம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார். சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் விதி 110ன் கீழ் அறிக்கை ஒன்றை முதல்வர் ஜெயலலிதா வாசித்தார். அதில் அவர் கூறியதாவது: ஒரு மாநிலத்தின் வளமான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்கும் மனித வள மேம்பாட்டிற்கு அடிப்படையாக விளங்குவது உயர் கல்வி.   உயர் கல்வியை நம் நாட்டிலுள்ள அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி, இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு விளங்கிவருகிறது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழுள்ள நான்கு மண்டல மையங்கள் மற்றும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் விதமாக, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டல அலுவலகங்களுக்கான கல்வி சார்ந்த கட்டடங்கள் கட்ட தலா ரூ.30 கோடி,   மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மண்டல மையங்களில் மாணவ மாணவியருக்கான விடுதி கட்டடங்கள் கட்ட தலா ரூ.10 கோடி,   திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நாகர்கோயில் ஆகிய இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் மாணவ  மாணவியருக்கான விடுதி கட்டடங்கள் கட்ட தலா ரூ.10 கோடி, பட்டுக்கோட்டை மற்றும் பண்ருட்டி ஆகிய இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் விடுதி கட்டடங்கள் தலா ரூ.5 கோடி செலவிலும் கட்டப்படும்.

அண்ணா பல்கலைக் கழகத்தின் பன்னிரெண்டு உறுப்புக் கல்லூரிகளுக்கும் மின் வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி மற்றும் பிற வசதிகள் 10 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தி தரப்படும். மொத்தத்தில் மேற்காணும் பணிகளுக்காக 150 கோடி ரூபாய் செலவிடப்படும்.  சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மற்றும் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் ஆகிய ஒன்பது பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றிலும் சுவாமி விவேகானந்தரின் பெயரில் 25 லட்சம் ரூபாய் செலவில்  உயர் ஆய்வு  மற்றும் கல்வி மையம் அமைக்கப்படும்.

2013  2014 ஆம் கல்வி ஆண்டிலிருந்து  எட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.  இது தவிர, மேலும் நான்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்த ஆண்டிலிருந்து துவங்கப்படும். இதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி, முதுகுளத்தூர் மற்றும் திருவாடானை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி ஆகிய 11 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் ஆக மொத்தம்  12 கல்லூரிகள் இந்த ஆண்டு முதல் துவங்கப்படும்.

இது தவிர, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இந்த ஆண்டு முதல் துவங்கப்படும். திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் ஒரு அரசு பொறியியல் கல்லூரியும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாரில் ஒரு அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரியும் இந்த ஆண்டு முதல் துவங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா அறிவித்தார்.

No comments