Disqus Shortname

உத்திரமேரூர் ஏரியில் தரமற்ற சீரமைப்பு பணி :சிறு மழைக்கே கரைகள் உடைந்து சேதம்

உத்திரமேரூர் ஜூலை 31 : 
உத்திரமேரூர் ஏரியில், கரையை பலப்படுத்தும் பணி, தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டதால், சில மாதங்களிலேயே மீண்டும் சேதமடைந்து காணப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான உத்திரமேரூர் ஏரி, 2,000 ஏக்கர் பரப்பளவில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை பயன்படுத்தி, உத்திரமேரூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள வேடபாளையம், நீரடி, காட்டுபாக்கம், பட்டைஞ்சேரி, வாடாநல்லூர், ஏ.பி. சத்திரம், நல்லூர் உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட கிராமங்களில், 5,462 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்த ஏரியில் உள்ள, 13 மதகுகள் மற்றும் ஏரிக்கரையை பலப்படுத்தி, சீரமைக்க, 1.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு பணிகள் நடைபெற்றன. ஆனால், தரமற்ற முறையில், பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த சிறிய மழைக்கே, ஏரிக்கரை ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. மதகுகளிலும், முழுமையாக பணி நிறைவு பெறாமல் உள்ளது. எனவே, இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "ஏரிக்கரையை பலப்படுத்தி, மதகுகளை சீரமைக்கும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன் தான் நிறைவு பெற்றது. ஆனால், சிறிய மழைக்கே, ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டு, கரை உடைந்ததை போல காணப்படுகிறது. எனவே, இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Click Here