Disqus Shortname

சீரழிந்து வரும் மாதிரியம்மன் கோவில் குளம்


உத்திரமேரூர் ஜூலை 12,2013: 
உத்திரமேரூர் மாதிரியம்மன் கோவில் குளம், கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டப்பட்டும், புதர் மண்டியும் சீரழிந்து வருவதால், தூர்வாரி, சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் நகரில், கால்நடை மருத்துவ மனைக்கு எதிரில், பழமை வாய்ந்த மாதிரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அருகே, குளம் உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து, இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளத்தில் நீராடி, அம்மனை வழிபட்டு வந்தனர். நாளடைவில், போதிய பராமரிப்பில்லாத காரணத்தால், நீர் மாசடைந்து பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. இதன் அருகே அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து, கழிவுநீர் கசித்து, குளத்தில் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும், துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், குளத்தினை சுற்றி புதர்கள் மண்டியுள்ளன. இதே நிலை நீடித்தால், குளம் தூர்ந்து போகும் நிலை உள்ளதால், இதனை தூர் வாரி, சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, பக்தர்கள் சிலர் கூறுகையில், "இக்கோவில் குளத்தில், ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். தற்போது, குளத்தினை சுற்றிலும் புதர்கள் நிறைந்துள்ளதால், அருகில் கூட செல்ல முடியவில்லை. ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் இக்கோவிலுக்கு திருவிழா நடைபெற உள்ளது. ஆனால், பக்தர்கள் குளத்தில் நீராட முடியாத நிலை உள்ளது. எனவே, குளத்தை தூர் வாரி, சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.