Disqus Shortname

"கால்நடை மருத்துவமனை தேவை'

உத்திரமேரூர் ஜூலை 21 :

குருமஞ்சேரி பகுதியில் கால்நடை மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி கால்நடை பராமரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குருமஞ்சேரி ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதன் அருகே, சீட்டனஞ்சேரி, சாத்தனஞ்சேரி, பினாயூர், கரும்பாக்கம், அரும்புலியூர் போன்ற கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில், விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், இப்பகுதியில், கால்நடை மருத்துவமனை இல்லாததால், நோய் தடுப்பு மற்றும் இதர தேவைகளுக்காக, 15 கி.மீ., தூரத்தில் உள்ள செங்கல்பட்டு மற்றும் சாலவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும், நோய் ஏற்படும் ஆடு, மாடுகளுக்கு, விரைந்து சிகிச்சை அளிக்க முடியாததால், இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.
எனவே, மேற்கண்ட கிராமங்களில் உள்ள கால்நடை பராமரிப்பாளர்களின் நலன் கருதி, குருமஞ்சேரி பகுதியில், கால்நடை மருத்துவமனை அமைக்க, கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.