Disqus Shortname

"பேருந்து சேவையை உடனே துவங்க வேண்டும்'

உத்திரமேரூர் ஜூலை 11:

காட்டுக்கொள்ளை கிராமத்திற்கு, நீண்ட காலமாக பேருந்து வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் அடிப்படை தேவைகளுக்கு, 4 கி.மீ., தூரம் நடந்து சென்று, பேருந்துகளை பிடித்து பயணித்து வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டுள்ளது காரியமங்கலம் ஊராட்சி. இங்குள்ள, காட்டுக்கொல்லை, திருவள்ளுவர் நகர், மேட்டுக்கொல்லை ஆகிய பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிக்கு போக்குவரத்து வசதி இல்லாததால், கிராம மக்கள், பல்வேறு தேவைகளுக்கு, காட்டுகொல்லை - காரியமங்கலம் இணைப்புச் சாலை வழியாக, 4 கி.மீ., தூரம் நடந்து சென்று, உத்திரமேரூர் - மதுராந்தகம் நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து, பேருந்துகள் மூலம் பயணித்து வருகின்றனர்.
இங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர், தினசரி 4 கி.மீ., தூரம் நடந்து சென்று, பேருந்து பிடிக்க வேண்டியுள்ளதால், மிகுந்த சிரமப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, காட்டுக்கொல்லை - காரியமங்கலம் இணைப்புச் சாலை, பல ஆண்டுகளாக, சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவித்து வருகின்றனர்.
எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி, காட்டுக்கொல்லை - காரியமங்கலம் இணைப்புச் சாலையை சீரமைத்து, பேருந்து சேவை துவங்கப்பட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.