Disqus Shortname

பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம் பல லட்சம் நிதி வீணடிப்பு

உத்திரமேரூர் ஜூலை 15 :
கரும்பாக்கத்தில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக்கூட கட்டடம், மூன்றாண்டுகள் ஆகியும், பயன்பாட்டிற்கு திறக்காமல்
பூட்டிக்கிடக்கிறது.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரும்புலியூர் ஊராட்சியில், கரும்பாக்கம், மாம்பாக்கம், மிளகர்மணி, பேரணக்காவூர், காவணிபாக்கம், சீதாவரம் மற்றும் அரும்புலியூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில், 4,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக, கடந்த 2009 -10ம் ஆண்டு, நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சமுதாயக்கூடம் கட்டும் பணி நடைபெற்றது.
கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்து, மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை, பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல், பூட்டிக் கிடக்கிறது. இதனால், இப்பகுதி மக்கள், சுப நிகழ்ச்சிகளை நடத்த, இட வசதியின்றி சிரமப்படுவதுடன், பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடம், பராமரிப்பின்றி, வீணாகி வருகிறது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், "சமுதாயக்கூடம் கட்டும் பணி, நிறைவடைந்து, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இதுவரை பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. இதனால், இப்பகுதி மக்கள், சுப நிகழ்ச்சிகளை நடத்த, 15 கி.மீ., தூரத்தில் உள்ள செங்கல்பட்டு மற்றும் வாலாஜாபாத் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே, புதிய சமுதாயக்கூட கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறக்க, அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.