Disqus Shortname

உத்தரமேரூர் அரசு ஆண்கள் பள்ளியில் கலை அறிவியல் கல்லுாரியில் பயில விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

உத்தரமேரூர் ஜீன்,04

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1970-ல் செங்கல்பட்டில் அரசு ராஜேஸ்வரி வேதாசலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2-வது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக உத்தரமேரூர் அருகே திருப்புலிவனத்தில் தொடங்கப்பட உள்ளது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அண்மையில் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து திருப்புலிவனத்தில் புதிய கல்லூரிக்கான கட்டடங்கள் கட்டும் வரை உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களும் உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை, தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, உத்தரமேரூர், மதுராந்தகம், மேல்மருவத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.
இது குறித்து கல்லூரி பொறுப்பாளராக தாற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் கிள்ளிவளவன் கூறியது: இந்த ஆண்டு இளநிலை தமிழ் 50, இளநிலை ஆங்கிலம் 50, இளநிலை கணிதம் (ஆங்கில வழி, தமிழ் வழி) தலா 50, இளநிலை வணிகம் 50, இளநிலை கணினி அறிவியல் 30 என மொத்தம் 280 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுச் செல்கின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இலவசமாகவும் (பதிவுக் கட்டணம் மட்டும் ரூ. 2), மற்றவர்களுக்கு ரூ. 27 வசூலிக்கப்படுகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி 280 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் இலவச விண்ணப்பங்கள் 100, மற்ற விண்ணப்பங்கள் 167 என மொத்தம் 267 விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து மாணவர்கள் வழங்கியுள்ளனர். திருப்புலிவனத்தில் புதிய கல்லூரிக் கட்டடம் கட்டும் வரை உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்புகள் நடைபெறும் என்றார் அவர்.
 தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் வரும் 25-ம் தேதி கல்லூரியை தொடங்கி வைக்க உள்ளார்.  ஜூலை 10-ம் தேதி மாணவர்கள் சேர்க்கைக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுக்க வேண்டும். எனவே ஜூலை 11-ம் தேதிக்குப் பிறகு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிகிறது.

No comments