Disqus Shortname

மழை பொய்த்ததால் கடும் வறட்சி குளமாகும் பெரிய ஏரிகள்

உத்திரமேரூர் : மழை பொய்த்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகள் கூட வறண்டு, குளங்களாக மாறி வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பாலாறு வறண்டாலும், பாசனத்திற்கு ஏரிகள் கைகொடுத்து வந்தன. மழைக்காலத்தில் இவற்றில் சேகரமாகும் நீர், ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு கை கொடுக்கும். ஆனால், மழை பொய்த்ததன் காரணமாக, கடந்த ஆண்டு, ஏரிகளில் போதிய அளவில் நீர் சேகரமாகவில்லை. மேலும், வரத்து கால்வாய்களும், நீர்பிடிப்பு பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டதால், பல ஏரிகள் குறைவான நீரையே கொண்டிருந்தன.
இந்நிலையில் கோடை வெயில் காரணமாக, வற்றாத ஏரிகள் கூட, வற்றிவிட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகளில் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்று உத்திரமேரூர் ஏரி. இது, பல்லவ மன்னன் நந்தி வர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டது.
பெருநகர் பகுதியில், செய்யாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு, வெள்ளப்
பெருக்கு ஏற்படும் போது ஏரியில் நிரப்பப்படும். கடந்த 2002ம் ஆண்டிற்கு பிறகு
ஏரியில் தண்ணீர் நிரம்பவில்லை. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செய்ததன் மூலம், அறுவடையான நெல்லை, இருப்பு வைக்க இடமின்றி தவித்த காலமும் உண்டு.
ஆனால், கடல்போல் பரந்து விரிந்து எப்போதும் நீர் வற்றாமல் காட்சியளிக்கும் உத்திரமேரூர் ஏரி, தற்போது வறண்டு, குளமாக மாறிவிட்டதை பார்த்து விவசாயிகளின் கண்கள் கலங்குகின்ன.

No comments