Disqus Shortname

வெண்டிவாக்கம் ஏரியில் நீர் சேகரமாவதில் சிக்கல்

உத்திரமேரூர் ஜூலை 22
 :வெண்டிவாக்கம் ஏரியில், நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஏரிக்குள் அமைக்கப்பட்டிருக்கும். குளத்திற்க்கு வந்தடையும் நீர் வரத்து, கால்வாயை மாற்று வழியில் அமைத்து, ஏரியில் நீர் நிரம்பிட வழிவகை செய்ய வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது, வெண்டிவாக்கம் கிராமம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இக்கிராமத்தில், 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது.
குடிநீர் ஆதாரம்
இந்த ஏரியில் சேகரமாகும் நீரை கொண்டு, அப்பகுதியில் உள்ள 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள், பாசன வசதி பெறுகின்றன. மேலும், வெண்டிவாக்கம் ஏரியில், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து குடிநீர் குழாய் மூலம், வெண்டிவாக்கம் காலனி பகுதிக்கு, குடிநீர் வினியோகம் செய்யபடுகிறது.
மழைக்காலங்களில், வெண்டிவாக்கம் நில பகுதிகளில் இருந்து வெளியேற்றக்கூடிய நீர், ஏரிக்கு சென்றடையும் வகையில், நீர் வரத்து கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. இக்கால்வாய் ஏரியில் இணையும் இடத்தில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், காலனி பகுதி குடிநீர் ஆதாரத்திற்காக, 2 ஏக்கர் பரப்பளவில், ஒரு குளம் தோண்டப்பட்டது.
விவசாயிகள் புகார்
ஆனால், கால்வாய் மூலம் வரும் நீர், குளத்தை நிரப்புவதற்கே போதுமானதாக உள்ளது. ஏரிக்கு நீர் சேகரமாவதில்லை. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் குமார், பாண்டுரங்கம் ஆகியோர் கூறியதாவது:
ஏரி நிரம்ப முக்கிய காரணமாக இருந்த, நீர்வரத்து கால்வாய் தண்ணீர், தற்போது, குளத்தினை சென்றடையும் படி அமைக்கபட்டுள்ளது.
இதனால், ஏரிக்கு வந்தடைய வேண்டிய நீர், குளத்தினை சென்றடைகிறது. குளமும் சுண்ணாம்பு கல் குளமாக உள்ளதால், நீர் தேங்காமல் சீக்கிரத்தில் வறண்டு விடுகிறது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக, ஏரி நிரம்பாத நிலை உள்ளது.
இரண்டு போகம் விவசாயம் செய்யக்கூடிய நிலை மாறி, இப்பகுதியில் தற்போது ஒரு போகம் கூட, விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே, குளத்திற்கு சென்றடையும் நீர், வரத்து கால்வாயினை சீர்படுத்தி, ஏரிக்கும், குளத்திற்கும் நீர் சென்றடையும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.