Disqus Shortname

உத்திரமேரூர் அரசு கல்லூரி எப்போது திறக்கப்படும்?

உத்தரமேரூர் ஆக,15


உத்தரமேரூரில் இந்த ஆண்டு முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எப்போது திறக்கப்படும்? என்று மாணவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே திருப்புலிவனத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அண்மையில் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
திருப்புலிவனத்தில் புதிய கல்லூரிக்கான கட்டடங்கள் கட்டும் வரை உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இக்கல்லூரி செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இளநிலை தமிழ் 50, இளநிலை ஆங்கிலம் 50, இளநிலை கணிதம் (ஆங்கிலவழி, தமிழ்வழி) தலா 50, இளநிலை வணிகம் 50, இளநிலை கணினி அறிவியல் 30 என மொத்தம் 280 மாணவ, மாணவிகளை சேர்க்க திட்டமிடப்பட்டது.
உத்தரமேரூர், மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகள் மட்டுமின்றி தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதி மாணவர்களும் இக்கல்லூரியில் படிக்க ஆர்வமுடன் விண்ணப்பித்திருந்தனர்.
இளநிலை தமிழ், ஆங்கிலம், வணிகம் ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 50 மாணவர்கள், இளநிலை கணிதம் ஆங்கில வழியில் 25, தமிழ் வழியில் 24 மாணவர்கள், இளநிலை கணினி அறிவியல் பாடத்தில் 40 மாணவர்கள் என மொத்தம் 239 மாணவர்கள் இதுவரை சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக உத்தரமேரூர், மேல்மருவத்தூர் பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப் பகுதி மாணவர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கல்லூரி ஜூலை 25-ஆம் தேதி திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கடந்த ஜூன் இறுதி மற்றும் ஜூலை முதல் வாரத்தில் திறக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுவது எப்படி? ஜூலை இறுதியில் கல்லூரி திறக்கப்படும் என்று ஆவலுடன் மாணவர்கள் காத்திருந்த நிலையில் இப்போது ஆகஸ்ட் பாதி மாதம் கடந்த நிலையில், இதுவரை கல்லூரி திறக்கப்படுவது குறித்த எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. தாற்காலிகமாக கல்லூரி நடைபெறும் உத்தரமேரூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவர்கள், கல்லூரி திறப்பது குறித்து செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியன மூலம் அறிவிப்பு வரும் என்று அறிவிப்புப் பலகையை பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
மேலும் கல்லூரி எப்போது திறந்து? எப்போது பாடங்களைப் படித்து, செமஸ்ட்டர் தேர்வுகளில் எப்படி தேர்ச்சியடைவது என்ற கவலையில் மாணவர்கள் ஆழ்ந்துள்ளனர்.
அடுத்த வாரத்துக்குள் திறக்க வாய்ப்பு
இது குறித்து மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனனின் கேட்டபோது, "வழக்கமாக புதிதாகத் தொடங்கப்படும் கல்லூரிகள் செயல்பட ஆகஸ்ட் இறுதியாகிவிடும். அந்த வகையில் இக்கல்லூரி அடுத்த வாரத்துக்குள் செயல்பட வாய்ப்பு உள்ளது' என்றார்.