Disqus Shortname

உத்தரமேரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் நீரில் மூழ்கிச் சாவு

உத்தரமேரூர்  August 2


காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் ஏரி நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தனர்.

உத்தரமேரூர் தாலுக்கா கல்யாணமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (37). விவசாயி. இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு லதா (13), கீதா (11), திருமலை (4) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். லதா, கீதா ஆகியோர் காட்டுப்பாக்கம் அரசுப் பள்ளியில் முறையே 7-ஆம் வகுப்பு, 5-ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

அக்கிராமத்தில் உள்ள ஏரியை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உருவான பள்ளங்களில் அண்மையில் பெய்த மழை நீர் தேங்கி, குட்டை போல் காணப்படுகின்றன. இந்த குட்டைகளில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குளித்துச் செல்வது வழக்கம். அதேபோல் நாகராஜின் குழந்தைகளும் தினமும் அந்த ஏரியில் பெற்றோர் இல்லாமல் தனியாகச் சென்று குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனராம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இக்குழந்தைகள் 3 பேரும் குளித்தனர். அப்போது, சிறுவன் திருமலை, திடீரென குட்டை நீரில் மூழ்கியுள்ளான். அவனைக் காப்பாற்ற லதா, கீதா ஆகியோர் தண்ணீரில் குதித்ததாகத் தெரிகிறது. இதில் திருமலை, கீதா ஆகிய இரு குழந்தைகளும் சேற்றில் சிக்கி மூழ்கினர். லதா நீரில் தத்தளித்தபடி அலறியுள்ளார்.

ஏரிக்கரையோரம் உள்ள சாலையில் சென்றவர்கள் குழந்தையின் அலறல் கேட்டு ஓடி வந்து பார்ப்பதற்குள், லதாவும் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

தகவலறிந்த கிராம மக்கள் ஓடி வந்து குட்டை நீரில் இறங்கி குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இறந்த நிலையில் 3 குழந்தைகளும் சடலங்களாகத்தான் மீட்கப்பட்டனர். அக்குழந்தைகளை வீட்டுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு: தகவல் அறிந்து உத்தரமேரூர் வட்டாட்சியர் சாவித்திரி, உத்தரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர், வீட்டுக்கு வந்தனர்.

அப்போது குழந்தைகளை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல குடும்பத்தாரும், கிராம மக்களும் எதிர்ப்புத் தெரிவித்து, வீட்டுக்குள் போலீஸ், அதிகாரிகள் நுழையாதபடி அமர்ந்தனர்.

அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள், 3 குழந்தைகளின் சடலங்களையும் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து குழந்தைகளின் உடல்கள் உடனடியாக பிரேதபரிசோதனை செய்யப்பட்டு, குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

சோகத்தில் மூழ்கிய கிராமம்: இச்சம்பவம் பற்றி அறிந்த காட்டுப்பாக்கம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் திரண்டு வந்து குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தினர். அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.