Disqus Shortname

உத்திரமேரூர் உழுகரை கிராமத்தில் சுடுகாடு செல்ல பாதை இல்லாததால் பொதுமக்கள் அவதி

உத்திரமேரூர்,டிச,16 :
உத்திரமேரூர் உழுகரை கிராமத்தில் சுடுகாடுக்கு செல்ல பாதை இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
உத்திரமேரூர் அடுத்த உழுகரை கிராமத்தில் உழுகரை காலனி, ஓங்கூர், உழுகரை ஆகிய பகுதிகளில் சுமார் 1500 மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராம மக்கள் கருவேப்பம்பூண்டி பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுடுகாடு உள்ளது. இப்பகுதியில் வசிப்போர் யாரேனும் இறந்தால், சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள இந்த சுடுகாட்டுக்கு செல்லவேண்டும்.
அப்போது  குமார், ராதாகிருஷ்ணன், சாமு ஆகியோருக்கு சொந்தமான வயல்வெளி வழியாக செல்லவேண்டும். இந்த வழியை மறித்து விட்டால், 3 கி.மீ. தூரம் சுற்றி செல்லவேண்டும். இந்த வயல்வெளி வழியாக பொது மக்கள் சடலங்களை கொண்டு செல்வதால், மேற்கண்ட 3 பேர் அந்த பாதையில் சவுக்கு மரங்களை நட்டுவிட்டனர். இதனால், சடலங்களை கொண்டு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது.
சடலங்களை கொண்டு செல்ல பாதை அமைக்க வேண்டும் என உத்திரமேரூர் தாசில்தார், கலெக்டர் ஆகியோரிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து உழுகரை கிராமத்தில் நடந்த வருவாய் திட்ட முகாமிலும் சுடுகாடுக்கு செல்ல பாதை அமைத்து தரும்படி மனு செய்தனர். அப்போதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பவுனம்மாள் (84) என்பவர் இறந்தார். சடங்குகள் முடிந்து உறவினர்கள் சடலத்தை சுடுகாடுக்கு கொண்டு சென்றனர். அப்போது, சுடுகாடுக்கு செல்லும் பாதையில் சவுக்கு மரங்கள் நட்டு இருந்ததால், அவர்கள் கடும் அவதியடைந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் அந்த பாதையை சீரமைக்க முயன்றனர். அப்போது, குமார் சகோதரர்களுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து உழுகரை விஏஒ மனோகரன், உத்திரமேரூர் எஸ்ஐ முனுசாமி ஆகியோர் சம்பவ  இடத்துக்கு வந்தனர். பின்னர், அங்கிருந்த முள்வேலிகளை அகற்றி, அந்த வழியாக பொதுமக்கள் சடலத்தை கொண்டு சென்றனர்.
இதுகுறித்து விஏஒ மனோகரன் கூறுகையில், மக்கள் பாதையாக கேட்கும் இடம் மற்றொருவருக்கு சொந்தமான இடம். அதை அவர்கள் சம்மதித்தால், மட்டுமே பெற்று தரமுடியும். அவர்களிடம் பொதுமக்களின் பிரச்னையை எடுத்து கூறித்தான் வாங்க முடியும். அவர்களிடம் மோதலில் ஈடுபட முடியாது என்றார்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், முன்பு முள்வேலி அமைத்தனர். அதனை சரிசெய்து சென்றோம். தற்போது, சவுக்கு மரங்களை நட்டு வைத்துள்ளனர். அந்த மரங்கள் வளர்ந்து விட்டால், சடலத்தை கொண்டு செல்லமுடியாது. அதனை அகற்றவும் முடியாது. தற்போது, அமைக்கப்பட்டுள்ள முள்வேலிகளை அகற்ற அவர்கள் அனுமதி தருகிறார்கள். தற்போது நட்டு வைத்துள்ள மரம் வளர்ந்துவிட்டால் அகற்ற விடமாட்டார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காணவேண்டும் என்றனர்.

No comments