Disqus Shortname

உத்திரமேரூர் அருகே குடியிருப்புக்கு நடுவே பாழடைந்த திறந்தவெளி கிணறு மூடி அமைத்திட கிராம மக்கள் கோரிக்கை

உத்திரமேரூர் 24/02/2020
உத்திரமேரூர் அடுத்த சாத்தனஞ்சேரி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்டகுடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குடிநீர் தேவைக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு மத்தியில் உள்ள கிணற்றை பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு வீடு வீடாக குடிநீர் விநியோகிக்கத் துவங்கியது. அதன்பின் கிணற்று நீரை யாரும் பயன்படுத்துவதில்லை. இதனால் கிணறு வறண்டு பாழடைந்து காணப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக்குகள் மற்றும் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகள் இதில் போடப்படுவதால் மழைக்காலங்களில் மழை நீரானது கழிவு நீராக மாறி கொசுக்களின் புகலிடமாக மாறி வருகிறது. இதனால் அப்பகுதி வாசிகளுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த கிணறு அருகே குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையம், விளையாட்டு திடல் உள்ளன. கிணறானது திறந்த வெளியில் உள்ளதால் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. குடியிருப்புக்கு மத்தியில் திறந்தவெளியில் உள்ள இந்த பாழடைந்த கிணற்றினை முறையாக பராமரித்து மூடி அமைத்திட வேண்டும் என கிராம மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments