Disqus Shortname

உத்திரமேரூர் பாப்பாங்குளம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்துக்கு மாற்ற கோரிக்கை

உத்திரமேரூர் நவ-7, : 
உத்திரமேரூர் அடுத்த பாப்பாங்குளம் கிராமத்தில் உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1921ம் ஆண்டு  முதல் இயங்கி வருகிறது. இந்த பள்ளி 9 ஏக்கர் பரப்பளவு கொண்டது. உத்திரமேரூர் ஒன்றியத்தில் 25க்கு மேற்பட்ட  கிராமங்களில் இருந்து மாணவர்கள் இந்த பள்ளியில் படிக்கின்றனர். இங்கு 1996ம் ஆண்டு முதல் ஆங்கில  வழிக்கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது.
 இப்பள்ளி தலைமை ஆசிரியர் இல்லாமல் கடந்த ஒரு ஆண்டாக செயல்பட்டு வருகிறது. 38 ஆசிரியர்கள் தேவைப்படும் இந்த பள்ளிக்கு தற்போது 25பேர் மட்டுமே உள்ளனர். அலுவலக ஊழியர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.
பள்ளிக்கு காவலாளிகள் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்துவிடுகின்றனர். மேலும், அவர்கள ஜன்னல் கதவு,  கண்ணாடிகளை உடைப் பது மட்டுமின்றி, வகுப்பறையில் உள்ள டேபிள், சேர் ஆகியவற்றையும் கொண்டு சென்றுவிடுகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப் பட்டு இருந்தாலும், சிலர் அதனை உடைத்துவிட்டு பாதையாக  அமைத்துவிட்டனர். மாணவர்கள் படிக்கும் வகுப்பறையின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேற்கூரையும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அச்சமடைந்து கிராம மக்கள் தங்களது பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்க்க தயங்குகின்றனர். இதனால், ஒரு காலத்தில் 2000 மாணவர்கள் படித்த பள்ளியில் தற்போது சுமார் 700 மாணவர்கள் படிக்கின்றனர்.
இங்குள்ள சத்துணவு கூடத்தில் 240 மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. சத்துணவு தயாரிக்கும் இடத்தில்  மின், குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. இதனால், இருளில் உணவு தயாரிக்கும்போது பல்லி, பூரான் போன்ற  பூச்சிகள் விழும் என்ற அச்சத்தில் வெளியே உள்ள மரத்தின் அடியில் சத்துணவு சமைக்கின்றனர்.
மாணவர்களுக்கு குடிநீர் வசதி இருந்தாலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர்  வீணாகிறது. கழிப்பறை வசதியும் இல்லாததால் மாணவர்கள் வெட்டவெளிக்கு சென்று வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று அப்போதை திமுக  ஆட்சியில் கடந்த 2008-09ம் ஆண்டு நபார்டு வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ1.48 கோடியில் 24 வகுப்பறைகள்  கொண்ட 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதில் ஒரு கட்டிடம் இந்தாண்டு புதிதாக துவங்கப்பட்ட அரசு  கலை கல்லூரிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து இப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், பழுதடைந்துள்ள கட்டிடத்தில் படிக்கும் மாணவர்களை திறக்கப்படாமல் உள்ள கட்டிடத்தில் வகுப்பு நடத்தவேண்டும். பள்ளிக்கு தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், காவலாளி ஆகியோரை நியமிக்க வேண்டும். இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் நுழையும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments