Disqus Shortname

மணல் லாரிகளால் சேதமடையும் உத்தரமேரூர் சாலை!

உத்தரமேரூர்,நவ 11
 அளவுக்கு அதிகமான மணல் லாரி போக்குவரத்தால், காஞ்சிபுரம் - உத்தரமேரூர் சாலை வேகமாக சிதிலமடைந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் அருகே வள்ளிமேடு மணல் சேமிப்பு மையம் மட்டும் இப்போது செயல்பட்டு வருகிறது.சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கைத் தொடர்ந்து, வாலாஜாபாத் அருகே பழையசீவரம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மணல் சேமிப்பு மையங்கள் நிறுத்தப்பட்டன.ஆனால், செய்யாற்றில் இருந்து அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு, வள்ளிமேடு மணல் சேமிப்பு மையத்தில் மலை போல் குவித்து வைக்கப்பட்டு எந்த தடையும் இல்லாமல் இம் மையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அதிகாரிகளிடம் கேட்டால், "பாலாறு தொடர்பாகத்தான் வழக்கு நிலுவையில் உள்ளது, செய்யாறு தொடர்பாக வழக்கு ஏதும் இல்லை' என்று கூறுகின்றனர்.
மேலும் வள்ளிமேட்டில் உள்ள மணல் மலைகள் தொடர்பாக நீதிமன்றம் தலையிடுவதற்கு முன்பு, மணல் மலை ஒன்று அங்கு இருந்ததற்கான சுவடே இருக்கக் கூடாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதிகாரிகளின் ஆலோசனையின்படி, முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான லாரிகள், 4 லோடு முதல் 9 லோடு வரை மணலை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட கனரக லாரிகள் என ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடைகள் அடித்து வருகின்றனர்.

கடந்த 2 வாரத்துக்கு முன்பு தொடங்கிய இந்த அசுர வேக மணல் அள்ளும் பணி இன்னும் முடிந்தபாடில்லை. இப்போது இங்கிருந்து அகற்றப்படும் மணல் மலைகள், மேடவாக்கம் உள்ளிட்ட சென்னை புறநகர்ப் பகுதிகளில் மறைவான இடங்களில் குன்றுகள் போல குவிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு மணலுக்கும் இப்போதே தேவைகள் இருக்கின்றனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு வள்ளிமேடு மணல் சேமிப்பு மையத்தில் இருந்து மணல் அள்ளிக் கொண்டு வரும் லாரிகள் வாலாஜாபாத் - காவந்தண்டலம் சாலையை முற்றிலுமாக பதம் பார்த்துவிட்டன. மேலும் 24 மணி நேரமும் இயங்கி வந்த மணல் லாரிகளால், அந்த வழியாக உள்ள கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதித்தது.
 
இதைத் தொடர்ந்து இந்த சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. அதாவது, மணல் சேமிப்பு மையங்களுக்குச் செல்லும் லாரிகள் வாலாஜாபாத் - காவந்தண்டலம் சாலை வழியாகவும், மணலை ஏற்றிக் கொண்டு திரும்பும் லாரிகள், காவந்தண்டலம் வழியாக செய்யாற்றில் இறங்கி அங்கிருந்து உத்தரமேரூர் - காஞ்சிபுரம் சாலையில் உள்ள மாகறல் வழியாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 10 நாள்களுக்கு மேலாக மணல் லோடுடன் லாரிகள் மாகறல் வழியாக உத்தரமேரூர் - காஞ்சிபுரம் சாலை வழியாக சென்று வருகின்றன.

9 லோடு வரை மணலை ஏற்றிக் கொண்டு 24 மணிநேரமும் இயங்கும் மணல் லாரி போக்குவரத்தால் மாகறல், ஆற்பாக்கம், மேல்பேரமநல்லூர் உள்ளிட்ட கிராமப் பகுதியில் 10 கி.மீ. தூரத்துக்கு ஆங்காங்கே சாலைகள் முற்றிலும் பெயர்ந்து அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக மேல்பேரமநல்லூர் தரைப்பாலம் ஒன்று முற்றிலும் சேதமடைந்துள்ளது. இப்பாலம் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் உள்ளது.

மேலும் ஆங்காங்கே உள்ள அபாய பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து வாரிச் செல்கின்றனர்.இது குறித்து மேல்பேரமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சரோஜா கூறியது: "கடந்த 10 நாள்களுக்கு முன்பு வரை சாலை நல்ல நிலையில் இருந்தது.

இப்போது லாரி போக்குவரத்து அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து சாலை முழுவதும் பெயர்ந்து விட்டது. சாலையோரத்தில் உள்ள எங்கள் வீடே அதிர்கிறது.வீடு முழுவதும் புழுதிக் காடாகிவிட்டது. நாள்தோறும் இந்த வழியாகச் செல்பவர்கள் கீழே விழுந்து ரத்தக் காயங்களுடன் மீண்டும் பயணத்தைத் தொடர்கின்றனர். மேலும் கடந்த 1 வாரத்தில் மட்டும் இந்த பகுதியில் கீழே விழுந்து பலத்தகாயம் அடைத்தவர்களை "108' ஆம்புலன்ஸ் மூலம் நாங்களே காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். எனவே மணல் லாரி போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்' என்றார்

அவர்.இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, லாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இயங்கும்படி நேரத்தை ஒதுக்க வேண்டும். சேதமடைந்த சாலைகளை, உடனடியாக சரி செய்து, பஸ் உள்ளிட்ட போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments