Disqus Shortname

மானாமதி பகுதியைச் சேர்ந்த பஸ் டிரைவர் கைது

சென்னை நவ,29
சென்னை அடையார் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் மின்வாரிய பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பலியானார். பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

மின்சார அலுவலக உதவியாளர்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்ரீரங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் ரவிகுமார். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி தயாநிதி (வயது 44). இவர் பெரம்பூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று காலை கேளம்பாக்கத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

தலை நசுங்கி பலி

அடையார் மேம்பாலத்தில் சென்றபோது, திருவான்மியூரில் இருந்து ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி நோக்கி சென்ற அரசு பஸ் (எம்.49) மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய தயாநிதி மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையின் நடுவில் விழுந்தார். அப்போது லாரியின் சக்கரம் தயாநிதியின் தலை மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த அடையார் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏ.ஜே.ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தயாநிதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் கைது

விபத்து குறித்து அடையார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மானாமதி பகுதியைச் சேர்ந்த கங்காதரன் (30) என்பவரைக் கைது செய்தனர். ரவிகுமார்–தயாநிதி தம்பதிக்கு வினோத் என்ற மகன் உள்ளார். அவர் கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

No comments