Disqus Shortname

பாப்பாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாட்டுவண்டி நிறுத்தும் அவலம்

உத்திரமேரூர் நவ 11 , :
உத்திரமேரூர் அடுத்துள்ள பாப்பாங்குளம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.  பள்ளியின் வளாகத்தில் இரண்டு கிணறுகள் மூடப்படாமல் உள்ளது. அதனருகில் முட்புதர்களும் உள்ளது.
இதனால் கல்லூரியின் அருகேயுள்ள கள்ளமாநகர், மல்லிகாபுரம் கிராம மக்கள் கல்லூரி வளாக முட்புதர் பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். அதன் காரணமாக பகல் நேரங்களில் உருவாகும்
துர்நாற்றத்தினால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். கல்லூரியின் மதில்சுவர் இடிந்து கிடப்பதால் அப்பகுதி மக்கள் தங்களுடைய மாட்டுவண்டிகளை கூட அங்குதான் நிறுத்துகிறார்கள், தினமும் 5 முதல் 6 வண்டிகள் நிறுத்தப்படுகிறது. சிலநேரங்களில் வண்டிகளில் கட்டப்பட்டிருக்கும் மாடுகள் கயிறு அவிழ்ந்து பள்ளி வளாகத்தில் உலா வருகின்றன. அதனைக் கண்டு மாணவர்கள் அங்கும் இங்குமாக ஓடி ஒளிகின்றனர்.
  இந்த அவல நிலையிலிருக்கும் பாப்பாங்குளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள கட்டிடங்களில், கடந்த செப்டம்பர் 13 ம்
தேதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கியது. இந்த கல்லூரி உத்திரமேரூர் அடுத்துள்ள திருப்புலிவனம் பகுதியில் அமைய உள்ளது. ஆனால்  தற்போது அங்கு எந்த கட்டிட வசதியும் இல்லாததால். பாப்பாங்குளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலுள்ள கட்டிடத்தில்  செயல்படுகிறது.

இந்த கல்லூரியில் இளநிலை தமிழ், 
இளநிலை ஆங்கிலம், இளநிலை கணிதம், இளநிலை கணினிஅறிவியல், இளநிலை வணிகம். என மொத்தம் 5 பிரிவுகள் உள்ளது. இந்த கல்லூரியில் 132 மாணவிகளும், 110 மாணவர்களுமாக மொத்தம் 240 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.

கல்லூரியின் ஒவ்வொரு துறைக்கும் 3 பேராசிரியர்கள் தேவை, ஆனால் இங்குஒரு துறைக்கு ஒரு பேராசிரியரே உள்ளனர். இதில் ஆங்கில துறைக்கு இருந்த பேராசிரியர் தற்போது இடமாறுதல் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். அதனால் ஆங்கில துறை பேராசிரியர் இல்லை, விளையாட்டு துறைக்கான ஆசிரியர்களும் இல்லை, அலுவலக பணிகளுக்கு 17 பேர் இருக்க வேண்டும், ஆனால் இங்கு 3 பேர் மட்டுமே உள்ளனர். மேலும் பியூன், துப்புரவு பணியாளர்கள், காவலாளிகள் உள்பட யாருமே இல்லை, கல்லூரி காலம் தாழ்த்தி தொடங்கப்பட்டதால் வரும் நவம்பர் 12 ம் தேதி நடைபெறவுள்ள முதல்  செமஸ்டர் தேர்வை எப்படி எழுதுவது என்ற அச்சத்தில் இக்கல்லூரி மாணவ - மாணவிகள் உள்ளனர்.
 மேலும் மாணவிகளுக்கான கழிப்பிடம் அருகில் மேல்நிலைப்பள்ளிக்கான ஒருவழிப்பாதை உள்ளது, அந்த வழியை மேல்நிலை வகுப்பு மாணவர்கள்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். உயர்கல்வித்துறை அதிகாரிகள் இந்த பள்ளி மற்றும் கல்லூரியின் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments