Disqus Shortname

உத்திரமேரூர் அருகே கல்குவாரியால் வீடுகளில் அதிர்வு பொதுமக்கள் அச்சம்

உத்திரமேரூர்,நவ,14:
  உத்திரமேரூர் அடுத்த நெல்வாய்கூட்ரோடு அருகே 8 ஏக்கர் நிலப்பரப்பில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் அதிக ஆழம் எடுப்பதற்காக அதிக  சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் பயன்படுத்தி பாறைகள் உடைக்கப்படுகிறது. அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிவரை ஒருமுறையும், மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை மறுமுறையும் என  நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பாறைகள் தகர்க்கப்படுகிறது. அப்போது அந்த அதிர்வில் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்ட பாத்திரங்கள் கூட கீழே விழுந்துவிடுகிறது. சில நேரங்களில் பூகம்பமாக இருக்குமோ என்ற அச்சம் கூட அந்த பகுதி மக்களுக்கு எழுந்துள்ளது.
இதனால் எழும்பும் அதிக ஒலியால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சப்படுகின்றனர். மேலும் அதனைச் சுற்றியுள்ள மங்களம், சுண்டுபள்ளம், ரெட்டை மங்கலம், நெல்வாய்கூட்ரோடு, ஒதையூர், இலப்பாக்கம், சேந்தான்குளம், வின்னமங்கலம், நெல்வேலி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments