Disqus Shortname

முறையாக பொருட்கள் வழங்காததை கண்டித்து ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை

உத்திரமேரூர் டிச,03 : 
உத்திரமேரூர் பேரூராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்படுகிறது. இந்த கடைக்கு நல்லூர், ஓங்கூர், நல்லூர் காலனி ஆகிய பகுதிகளில் இருந்து 500க்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இங்கு ஒரு பெண் ஊழியர் வேலை பார்க்கிறார்.
இந்த கடை வாரத்தில் 3 நாட்கள் மட்டும் திறக்கப்பட்டு காலை 9 மணி முதல் 1 மணி வரையும், மதியம் 3 முதல் 7 மணி வரையும் செயல்பட வேண்டும்.
இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் பொதுமக்கள், அரிசி வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு சென்றனர். அப்போது, நல்லூர் பகுதி மக்களுக்கு அரிசியில்லை என்று ஊழியர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பொது மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
உடனே அவர், இங்கு நிற்பவர்கள் யாருக்கும் அரிசி கிடையாது. யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்து கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
தகவலறிந்து கூட்டுறவு பண்டக சாலை சங்க தலைவர் லட்சுமணன் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொதுமக்களிடம் விசாரித்தனர். அதன்பின்னர், அதிகாரிகள் உத்தரவின் பேரில் பொது மக்களுக்கு அரிசி வழக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காலை 9 மணிக்கு திறக்க வேண்டிய ரேஷன் கடை 12 மணிக்கு திறக்கப்படுகிறது. 4 மணிக்கு மூடிவிடுகின்றனர். இதனால் வேலைக்கு செல்பவர்கள் அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை உள்ளது. கடையில் எந்த பொருட்களும் சரிவர வினியோகிப்பது இல்லை. அதை பற்றி கேட்டால், எந்த பொருளும் வழங்க முடியாது என இங்குள்ள பெண் ஊழியர் கூறுகிறார். இதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

No comments