Disqus Shortname

கயத்தாறு அருகே கார் - வேன் மோதல்: உத்தரமேரூர் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உள்பட 14 பேர் காயம்

உத்திரமேரூர், டிச. 09:
கயத்தாறு அருகே திங்கள்கிழமை காரும், வேனும் மோதிக்கொண்டதில் வேனில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் உள்பட 14 பேர் காயமடைந்தனர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் தர்மர் மகன் ராஜேஷ் (40). மருத்துவர். இவர் திருநெல்வேலிக்கு காரை ஓட்டிச் சென்றார். கயத்தாறு அருகேயுள்ள கட்டபொம்மன் சிலை அருகே கார் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவரில் ஏறி, கன்னியாகுமரியிலிருந்து   உத்தரமேரூருக்குச் சென்று கொண்டிருந்த வேன் மீது மோதியதாம்.
இதில், வேன் ஓட்டுநர் உத்தரமேரூர் மன்னர் குடிசையைச் சேர்ந்த குமாரவேல் (26), வேனில் பயணம் செய்த ஐயப்ப பக்தர்கள் நங்கையர்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பிரபாகரன் (24), பூபாலன் (30), ராஜேந்திரன் (32), முருகன் (30), மகேஷ் (19), பாலாஜி (20), முனியாண்டி (22), பிரதாப் (7), யுவராஜ் (18) மற்றும் காரை ஓட்டிவந்த ராஜேஷ் உள்பட 14 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments