Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பாலாற்றில் ரூ.24 கோடி செலவில் புதிய பாலம் பணி தொடக்கம்

காஞ்சீபுரம், டிச. 17–
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரக்காட்டுபேட்டை காவித்தண்டலம், மாம்பாக்கம், சீத்தஞ்சேரி, தண்டரை உள்ளிட்ட 30–க்கும் மேற்பட்ட கிராமங்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. அருகில் உள்ள நகரமாக செங்கல்பட்டு விளங்குகிறது.
இக்கிராம மக்கள் செங்கல்பட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் அருகில் உள்ள பாலாற்றை கடந்து தான் செல்ல வேண்டும். மழை காலங்களில் அரும்புலியூர் வழியாக 15 கிலோ மீட்டர் சுற்றி செங்கல்பட்டு செல்லும் நிலை இருந்தது. எனவே பாலாற்று பகுதியில் புதிய பாலம் அமைக்கப்படவேண்டுமென கிராம மக்கள் கடந்த 50 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
வாலாஜாபாத் பா.கணேசன் எம்.எல்.ஏ. சட்ட சபையில் புதிய பாலம் அமைப்பது தொடர்பாக பேசி அரசின் அனுமதி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2013–14 நிதியாண்டில் புதிய பாலம் அமைக்க அரசின் சார்பில் ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, எங்களின் 50 ஆண்டு கால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்பாலம் அமைக்கப்பட்டால் விவசாயிகள், பொது மக்கள், பள்ளி மாணவ– மாணவிகள் மிகவும் பயன் பெறுவர்.
புதிய பாலத்தினை தமிழக அரசிடம் பெற்று தந்த சட்ட மன்ற உறுப்பினருக்கு நன்றி என்றனர்.

No comments