Disqus Shortname

உத்தரமேரூர் அரசு கல்லூரி இன்று திறப்பு

உத்தரமேரூர் அரசு கலைக் கல்லூரி நீண்ட இழுபறிக்கு பிறகு வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ளது.உத்தரமேரூர் அருகே திருப்புலிவனத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.இளநிலை தமிழ், ஆங்கிலம், வணிகம், இளநிலை கணிதம் (ஆங்கில வழி, தமிழ் வழி), இளநிலை கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மொத்தம் 239 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். திருப்புலிவனத்தில் புதிய கல்லூரிக்கான கட்டடங்கள் கட்டும் வரை உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இக்கல்லூரி செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இக்கல்லூரியுடன் தமிழகம் முழுவதும் புதிதாக அறிவிக்கப்பட்ட 14 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
அனைத்து கல்லூரிகளும் கடந்த ஜூன் இறுதி வாரத்தில் தொடங்கப்பட்ட நிலையில், புதிதாகத் தொடங்கப்பட்ட கல்லூரிகள் மட்டும் திறப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் புதியக் கல்லூரிகள் வெள்ளிக்கிழமை பகல் 12.05 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்தபடியே விடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைப்பார் என்ற தகவல் வெளியானது.இதைத் தொடந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன், உத்தரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர், உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக செயல்பட உள்ள கல்லூரி வகுப்பறைகளை வியாழக்கிழமை பார்வையிட்டனர்.

No comments