Disqus Shortname

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரிப்பது குறித்து காஞ்சீபுரத்தில் கலெக்டர் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம்

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக காஞ்சீபுரத்தில் கலெக்டர் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

1 லட்சத்து 13 ஆயிரத்து 209 பேரை மக்கள் தொகையாக கொண்ட உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 73 கிராம ஊராட்சிகள், 362 சிறு கிராமங்கள் உள்ளன. மக்கள் வசதிக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் இந்த ஊராட்சி ஒன்றியத்தை 2-ஆக பிரிக்க வேண்டும் என்று நீண்டநாள்களாகவே கோரிக்கைகள் இருந்து வந்தது. இந்த நிலையில் உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து சாலவாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க திட்டமிடப்பட்டது.

கருத்துக்கேட்பு கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம், காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா அரங்கத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் லி.சித்ரசேனன் தலைமை தாங்கி, கிராம மக்களின் கருத்துக்களை கனிவுடன் கேட்டார்.
அப்போது கிராம மக்கள், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

25 ஆண்டு பிரச்சினை

மேலும் கிராம மக்கள், ‘‘25 ஆண்டு காலமாக இந்த பிரச்சினை இருந்து வந்தது. தமிழக அரசு உடனடியாக உத்திரமேரூரை தலைமை இடமாக கொண்டு உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியமும், சாலவாக்கத்தை தலைமையிடமாக கொண்டு சாலவாக்கம் ஊராட்சி ஒன்றியமும் அமைத்திட அரசுக்கு கலெக்டர் கோப்புகளை அனுப்ப வேண்டும்’’ என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கூட்டத்தில் வாலாஜாபாத் பா.கணேசன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

No comments