Disqus Shortname

உத்தரமேரூர் அரசுக் கல்லூரி திறப்பதில் தொடர்ந்து இழுபறி?

உத்தரமேரூரில் இந்த ஆண்டு முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே திருப்புலிவனத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தொடங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இளநிலை தமிழ், ஆங்கிலம், வணிகம் ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 50 மாணவர்கள், இளநிலை கணிதம் ஆங்கில வழியில் 25, தமிழ் வழியில் 24 மாணவர்கள், இளநிலை கணினி அறிவியல் பாடத்தில் 40 மாணவர்கள் என மொத்தம் 239 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர்.
திருப்புலிவனத்தில் புதிய கல்லூரிக்கான கட்டடங்கள் கட்டும் வரை உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இக்கல்லூரி செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அனைத்துக் கல்லூரிகளும் கடந்த ஜூன் இறுதியில் தொடங்கப்பட்ட நிலையில் உத்தரமேரூர் கல்லூரி உள்பட தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட 14 கல்லூரிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
ஜூலை இறுதியில் கல்லூரித் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான எந்த ஏற்பாட்டையும் தமிழக அரசு செய்யவில்லை.
கல்லூரி எப்போது திறக்கப்படும் என்று, கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனனிடம் கேட்டபோது, "ஆகஸ்ட் இறுதியில் திறக்கப்படும்' என்றார். இது குறித்த செய்தி  கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதியும் வெளியானது.  ஆனால் ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் மாதத்தில் 10 நாள்கள் கடந்த நிலையில் இதுவரை கல்லூரித் திறப்பது குறித்து அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.மாவட்ட நிர்வாகமும் கல்லூரித் திறப்பதில் எந்த அக்கறையும் காட்டவில்லை.மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த ஓரிரு நாள்களில் கல்லூரியைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments