Disqus Shortname

உத்திரமேரூர் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல் டிரைவர் உள்பட 16 பேர் காயம்

 உத்திரமேரூர் செப்,09

அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். காஞ்சிபுரம் அருகே இன்று காலையில் நடந்த இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்திரமேரூரில் இருந்து அரசு பஸ் ஒன்று இன்று காலை 6.30 மணிக்கு காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டது. உத்திரமேரூர் அடுத்த மானாமதியை சேர்ந்த டிரைவர் அன்பரசன், பஸ்சை ஓட்டி சென்றார். காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்று பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் பைக்கில் சென்ற நபரின் செல்போன் திடீரென ஒலித்ததால் அதை எடுத்து அவர் பேசினார். அப்போது பைக் நிலைதடுமாறியது. இதனால் பின்னால் வந்த அரசு பஸ் டிரைவர், பைக் மீது மோதாமல் இருக்க பதற்றத்தில் வலதுபுறம் பஸ்சை திருப்பினார். அந்த நேரத்தில் எதிரே காஞ்சிபுரம்-திண்டிவனம் அரசு பஸ் வந்தது. இரு பஸ்களும் நேருக்கு நேர் மோதி பாலாற்று பாலத்தில் தடுப்பு சுவர் மீது இடித்து நின்றது. இரு பஸ்களிலும் இருந்த பயணிகள் அலறி துடித்தனர். இதில் டிரைவர் அன்பரசன் மற்றும் திண்டிவனம் பஸ் கண்டக்டரான செய்யாறை சேர்ந்த குப்பன் (42), பயணிகள் அரசன்குப்பம் ஐஸ்வர்யா (25), மகாலட்சுமி (25), பெருநகர் கோகுல் (28), தாம்பரம் பன்னீர்செல்வம் (50), பார்த்திபன், மாரியம்மாள், கீழ்வெண்பாக்கம் சரத்குமார் (22), மாமண்டூர் சங்கீதா (24), சோழவரம் ஜெயந்தி (26) உள்ளிட்ட 16 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பெரும் விபத்து தவ¤ர்ப்பு: செல்போனில் பேசிக் கொண்டு வாகனங்கள் ஓட்டக்கூடாது என போக்குவரத்து காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஆனால் அதையும் மீறி சிலர் செல்போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டும் அவலம் தொடர்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. பஸ்கள் மோதிய வேகத்தில் பாலத்திலிருந்து விழுந்திருந்தால் உயிர்சேதம் நிகழ்ந்திருக்கும். பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி பஸ்கள் நின்றதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

No comments