Disqus Shortname

திறந்தவெளியில் தயாராகும் சத்துணவு: மாணவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறி ?


உத்திரமேரூர்
உத்திரமேரூர்  Sep 04 
 
சத்துணவுக்கூடங்களில் கட்டட வசதியின்மை மற்றும் புகைபோக்கியின்மை உள்ளிட்ட குறைபாடுகள்
உத்திரமேரூர்
காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பள்ளிகளில் திறந்த வெளியில் சத்துணவு தயாராகும் அவலம் தொடர்கிறது. இதனால் மாணவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளிகள், ஆதி திராவிட நலத்துறை பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகிய இடங்களில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 1,565 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் பெரும்பாலும் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்களாகவே உள்ளன. இவைகளில் அனேகக் கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலும் பல சத்துணவு கூடங்களில் புகை போக்கி அமைப்புகள் இல்லை. இதனால் வெட்ட வெளியில் சத்துணவு தயாரிக்கப்பட்டு வருகிறது.
மிகவும் மோசமான நிலையில் உள்ள கட்டடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதை இடித்துவிட்டோ அல்லது மாற்று இடத்திலோ புதிய சத்துணவு மையக் கட்டடங்கள் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்து வருகிறது. அதன்படி கடந்த 2007-2008-ம் ஆண்டுகளில் புதிதாக 33 கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு 30 மட்டுமே இது வரை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 2008-2009-ல் 142 கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு 95 கட்டடங்களும், 2010 - 2011-ல் 378 கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு 137 கட்டடங்கள் மட்டுமே கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த 3 காலக்கட்டத்தில் மட்டும் மொத்தம் 553 சத்துணவு மையக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு 291 கட்டடங்கள் கட்டிமுடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இது தவிர கடந்த 2012-2013-ம் ஆண்டில் மேலும் 300-க்கும் மேற்பட்ட சமையல் மையக் கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவைகளில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவைகள் கட்டிமுடிக்கப்படாமல் உள்ளன.
அப்படியே கட்டினாலும், போதிய காற்றோட்ட வசதி, புகைபோக்கி வசதி மற்றும் மின்சாரவசதிகளில் பல்வேறு குறைபாடுகள் நிலவுகிறது. இதனால் பாதுகாப்பு இல்லாத, சுகாதாரம் இல்லாத கட்டடங்களிலும், திறந்தவெளியிலும் சத்துணவு சமைக்கப்பட்டு மாணவர்களுக்கு பரிமாறப்படும் அவலம் அரங்கேறுகிறது. இவ்வாறு சமைக்கப்பட்டு பரிமாறப்படும் உணவு மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை ஏற்படுத்துகிறது. எனவே நிலுவையில் உள்ள அனைத்து கட்டடங்களையும் வரும் மழை காலத்துக்கு முன்பு, அனைத்து வசதிகளுடன் விரைந்து கட்டிமுடிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments