Disqus Shortname

புதிதாய்ப் பொலிகிறது புராதனக் கோயில்




உத்திரமேரூர்

இன்று உத்திரமேரூர் என்றழைக்கப்படும் பண்டைய சதுர்வேதமங்கலம், கைலாசநாதர் ஆலயத்தால் சிறப்புற்று விளங்குகிறது. கி.பி.750ம் ஆண்டு நந்திவர்ம பல்லவன் காலத்திய இந்த திருக்கோயிலில் ஈசனுடன் அம்பாள் காமாட்சி அருட்காட்சி தருகிறாள். இந்த ஆலயம் ஆதித்யசோழன், ராஜேந்திர சோழன், கிருஷ்ண தேவராயர், பிற்காலப் பாண்டியர்கள், சம்புவராயர்கள் போன்றோர்களால் வெகுவாக பூஜிக்கப்பட்டு, அடுத்தடுத்துப் பல திருப்பணிகளைக் கண்டது. உதாரணத்துக்கு, நந்தா விளக்கு எரித்ததற்கான கல்வெட்டுகள் இன்றும் காணக்கிடைக்கின்றன. காலச் சக்கரம் மெல்ல மெல்ல இத்திருக்கோயிலின் எழிலை மாற்றி சிதிலமாக்கியது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை உருவானது. முட்புதர்கள் மண்டின, பக்தர்கள் உள்ளே சென்று ஈசனை வழிபட முடியாத சூழலிலும் சிவாச்சாரியார்கள் முடிந்தவரை தினமும் திருவிளக்கேற்றி வணங்கி வந்தனர். காலத்தின் கோலங்களால் உண்டான பாதிப்புகள் எல்லாவற்றையும் கடந்து நிலைத்திருக்கும் இக்கோயில், காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தின் சாயலைக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிவநேசர்கள் பெரும்பாடுபட்டு இந்தப் பழம்பெரும் கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தும் முயற்சிகளை மேற்கொண்டனர். அவனருளால் அவன்தாள் வணங்கி என்பதுபோல ஈசனின் அருளாலேயே அவனின் திருமாளிகையின் திருப்பணியை முற்றிலுமாக முடித்துள்ளனர்.

இக்கோயில் சுற்றுச் சுவர்களுடன் விளங்குகிறது. தென்புற நுழைவு வாயிலையும் கிழக்கு நோக்கிய அமைப்பையும் கொண்டிருக்கிறது. ஆறடி உயரமான கருங்கல் பீடத்தின் மேல் முழுவதும் கோயிலுக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. மேல் தளமும், தளத்தின் மையத்தின் மேல் இரண்டு அடுக்குகளுமாக அமைந்து தாமரை மொட்டு போன்ற கோபுரத்தை கொண்டது. மேல் அடுக்கைச் சுற்றிலும் சிற்பங்கள் நிறைந்திருக்கும். சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் ஆகியவற்றை ஊறவைத்து நன்கு மைபோல அரைத்து சிற்பங்களை உருவாக்கி மேல் பூச்சும் செய்துள்ள பண்டைய கால பாணியை மாற்றாமல் அப்படியே இன்றும் புதுப்பித்துள்ளனர்.

வெளிச்சுற்றில் வடமேற்கு மூலையில் காணப்படும் நரசிம்மரின் சிற்பம் குறிப்பிடத்தக்கது. சைவத்துக்கும் வைணவத்துக்கும் பொதுவான ‘பிரதோஷ காலத்தின்’ மகிமையை நன்கு உணர்த்துகிறது. மேலும் தூக்கி நிறுத்தப்பட்டு, நீட்டிக்கப்பட்ட கருங்கற் தூண்கள் தாங்கி நிற்கும் முன்முக மண்டபத்தையும் அப்படியே புதிதாக மாற்றியிருக்கிறார்கள். மண்டபத்திற்கு வெளியே அமர்ந்த நிலையில் வடக்கு நோக்கித் திருமுகம் காட்டும் நந்திக்கென்றே தனி நந்தி மண்டபம் உருவாகியிருக்கிறது.

மகாமண்டபத்துடன் இணைந்தே காமாட்சி அம்மனின் சந்நதி அமைந்துள்ளது. இதற்கு முன்பு இச்சந்நதியோடு இருந்த மகா முக மண்டபம் இடிந்தபோது, இச்சிலை தனியாக எடுத்து பாதுகாக்கப்பட்டது; பிறகு சீர் செய்யப்பட்டது. கோயிலுக்குள் அர்த்த மண்டபம் அடுத்துக் கருவறை. கருவறைச் சுவரை வெளிச்சுற்றுச் சுவரிலிருந்து பிரித்துத் தனியாக அமைத்துள்ளனர். ஈசன் லிங்கரூபமாய் கைலாசநாதர் எனும் திருப்பெயரில் அருள்பாலிக்கிறார். அழகான தாமரை மலர் போலுள்ள ஆவுடையாரும் அவர்மீது ஜொலிக்கும் உருளை வடிவ லிங்கமும் லிங்க பாணத்தின் மீது அமைந்த ரேகைகளும் அவரின் காலங்கருதாது வழங்கும் அருளையும் அனுபவித்து உணரலாம்.

இந்த அரிய திருக்கோயிலின் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் 18.1.2013 அன்று காலை 9 மணிக்குமேல் 10:30 மணிக்குள் நடைபெற இருக்கிறது. பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறலாம். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து இத்தலத்தை அடைய பேருந்து வசதிகள் உண்டு. ஆலயத் தொடர்புக்கு: 9442826482, 9443068382.

Thanks By
எல்.குமார்

No comments