Disqus Shortname

உத்திரமேரூர் தாசில்தார் அலுவலகத்தில் சோதனை

உத்திரமேரூர்: அடங்கல் சான்று வழங்க, 2,200 ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர், இடைத்தரகராக செயல்பட்ட, ஓய்வு பெற்ற ஆவண காப்பக ஊழியரை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், கம்மாளம்பூண்டியை சேர்ந்தவர் வல்லரசு; முன்னாள் மக்கள் நலப்பணியாளர். சில தினங்களுக்கு முன், தன் நிலத்திற்கு அடங்கல் சான்றிதழ் கேட்டு, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் மனுவை, உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பினார்.
வட்டாட்சியர் அலுவலகத்தில், வேலூர், சத்துவாச்சாரியை சேர்ந்த செல்வம், 35, துணை வட்டாட்சியராக உள்ளார். வல்லரசு அவரை சந்தித்த போது, அடங்கல் சான்று வழங்க, 4,400 ரூபாய் லஞ்சம் தருமாறும்; இடைத்தரகராகப் பணிபுரியும், ஓய்வு பெற்ற, ஆவண காப்பக ஊழியர் குப்புசாமியிடம் பணத்தை வழங்கும்படி கூறினார். அவ்வளவு பணம் தர முடியாது எனக் கூறிய வல்லரசு, 2,200 ரூபாய் தருவதாக தெரிவித்தார். அதற்கு இருவரும் சம்மதித்தனர். வீடு திரும்பிய வல்லரசு, பணம் கொடுக்க விரும்பாமல், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள், ரசாயனப் பவுடர் தடவிய பணத்தை, வல்லரசுவிடம் கொடுத்து அனுப்பினர். பகல், 1:00 மணிக்கு, ஒய்வு பெற்ற ஆவணக்காப்பக ஊழியர் குப்புசாமியிடம், 2,200 ரூபாயை வல்லரசு வழங்கினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், துணை வட்டாட்சியர் செல்வம், பணம் வாங்கும்படி கூறியதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, செல்வத்தை கைது செய்தனர்.

No comments