Disqus Shortname

ஆள்வது மத்திய அரசு! துன்பப்படுவது மக்களா? வைகைச்செல்வன்

ஜன.10 - கழக நிரந்தரப் பொதுச்செயலாளர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் (மேற்கு) மாவட்ட கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறையின் சார்பில் மாபெரும் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது. விழா ஏற்பாட்டினை காஞ்சிபுரம் (மேற்கு) மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டி.சந்திரமெளலி செய்திருந்தார்.
இவ்விழாவில், கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைச் செயலாளர், அரசு தலைமைக் கொறடா டாக்டர் வைகைச்செல்வன் எம்.எல்.ஏ. நிகழ்ச்சியினை துவக்கி வைத்து, பரிசுகளை வழங்கி பேசியதாவது:-​​
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் என்றென்றும் நிற்பவர் எம்.ஜி.ஆர். இல்லாமல் இருந்திருந்தால் தமிழக அரசியல் சீரழிந்து இருந்திருக்கும். ஜெயலலிதா கடைக்கோடி தொண்டனையும், கழகத்தையும் கட்டிக்காத்து வருகின்றார். எம்.ஜி.ஆரின் மறு உருவமாக ஜெயலலிதா வாழ்ந்து வருகிறார்.
ஒரு நாடு உண்மையான முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் இளைஞர் சமுதாயம் முன்னேற்றம் காண வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினருக்கு முழு கல்வியறிவு கிடைத்திட வேண்டும். ஏழை, எளிய மக்கள் அனைவரும் ஏற்றம் பெற வேண்டும். அப்படி தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றிட இல்லாமை இல்லாத நிலையினை தமிழகத்தில் உருவாக்கி, தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் முதல்வர் ஜெயலலிதா அயராது பாடுபட்டு வருகின்றார்.

இந்தியாவிலேயே கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, கல்வித்துறைக்கு ரூ.15,000​ கோடி நிதியினை ஒதுக்கித் தந்துள்ளதோடு மட்டுமல்லாமல் மாணவ, மாணவியர்களுக்கு காலணி முதல் கணினி வரை, சீருடை, மிதிவண்டிகள் அனைத்தையும் விலையில்லாமல் வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தை உருவாக்கியுள்ளார்.

ஏழை மாணவர்கள் வசதி படைத்த மாணவர்களுக்கு இணையான கல்வியினைப் பெற வேண்டும். கோடீஸ்வரர்களின் குழந்தைகளின் கையில் மட்டுமே இருந்து வந்த மடிக்கணினியினை இன்று குடிசையில் வாழுகிற ஏழையின் மகன் கூடப் பெற முடியும் என்ற நிலையினை உருவாக்கி முதல்வர் ஜெயலலிதா பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வருகின்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கி வருகின்றார்.

நாட்டின் எதிர்கால சந்ததி ஆகிய மாணவர்கள் நலன் கருதி, தமிழ்நாட்டில் 22 கலைக்கல்லூரி, 10 பாலிடெக்னிக், 3 பொறியியல் கல்லூரிகள் கடந்த வருடத்தில் தந்துள்ளார்கள். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்கள் பள்ளியிலேயே வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் பெறும் வண்ணம் ஏற்பாடு செய்துள்ளார். மாணவர்கள் தாலுகா அலுவலகம் சென்று அலைக்கழிக்கப்படுவதை, நிறுத்தி உள்ளார். கருவறை முதல் கல்லறை வரை பல்வேறு திட்டங்களை தந்துள்ளார்.

கருணாநிதி ஆட்சியில் இருந்த போது இலங்கை தமிழர் பிரச்சினையை கண்டு கொள்ளவில்லை. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சித்ரவதை செய்யப்பட்டார்கள். எதனையும் கண்டு கொள்ளாமல் அவர், இன்று டெசோ மாநாடு என்று கூறி இரட்டை வேடம் போடுகிறார். இலங்கைத் தமிழர்களைப் பற்றி பேச கருணாநிதிக்கு யோக்கியதை கிடையாது.

கருணாநிதியின் கட்சியினர் 13 ஆண்டுகள் மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் தமிழர் நலனுக்காக எதையும் செய்யவில்லை. குரல் கொடுக்கவில்லை. தமிழக ஜீவாதார உரிமைகளை காவு கொடுத்தார். காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு, கச்சத்தீவு பிரச்சினை என எந்த பிரச்சினையிலும் அவர் அக்கறை காட்டவில்லை.

ஜெயலலிதா பிரதமராக வந்தால் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். விடிவு காலம் பிறக்கும். மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளை சுமூகமாக பேசி தீர்த்து வைப்பார் என டெல்லியில் உள்ள பத்திரிகைகள் எல்லாம் சொல்கின்றன. நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைத்து வெற்றிக்கனியை ஜெயலலிதாவின் காலில் சமர்ப்பிக்க வேண்டும். நாளைய பிரதமராக ஜெயலலிதா வருகின்ற நாட்கள் அருகில் உள்ளது. நம்முடைய எண்ணம் செயல்பாடு ஜெயலலிதாவை பிரதமர் ஆக்குவது என வீரசபதம் ஏற்போம். இவ்வாறு அரசுத் தலைமைக் கொறடா டாக்டர் வைகைச்செல்வன் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.சோமசுந்தரம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பன்னீர்ச்செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் காஞ்சிபுரம் பாசறை மாவட்டத் தலைவர் சுபாஷ் நன்றியுரை கூறினார்.

No comments