Disqus Shortname

சாலையைக் காணவில்லை ..

காஞ்சிபுரம்அக் 13: சித்தனக்காவூர் ஊராட்சி அம்பேத்கர்நகரில் போட்டதாக கூறப்படும்  சிமென்ட் சாலை எங்கேபோனது, இது தொடர்பாக ஊழலுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஆர்ஓவிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சித்தனக்காவூர் ஊராட்சி அம்பேத்கர்நகர் கிராம மக்கள், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜனிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: உத்திரமேரூர் ஒன்றியம் சித்தனக்காவூர் ஊராட்சி அம்பேத்கர்நகர் கிராமத்தில் 75க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 2013-14 ஆண்டு தாய்திட்டத்தின் மூலம் கிராமத்தில் 3 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை சிமென்ட் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் மண் சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் இவ்வழியாக வாகனங்கள் செல்வதற்கும், முதியவர்கள், சிறுவர்கள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது.

சிமென்ட் சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி என்னானது, ஏன் சாலை அமைக்கவில்லை என அதிகாரிகளிடம் கேட்டபோது எந்தவித பதிலும் அளிக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டபோது, அதில் அளிக்கப்பட்ட கடிதத்தில், 14-11-2014 அன்று அம்பேத்கர்நகர் கிராமத்தில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 359  ரூபாய் செலவில் சிமென்ட் சாலை போடப்பட்டதாகவும், அதற்கான தொகையை ஒப்பந்ததாரர்களிடம் செலுத்திவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிடப்படும் சாலை மண் சாலையாகவே உள்ளது. அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கூட்டு சதியால் போடப்படாத சாலையை போட்டதாக கூறி மோசடி செய்துள்ளனர்.

போட்டதாக கூறப்படும் சிமென்ட் சாலையை கண்டுபிடித்து தர வேண்டும். ஊழலுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முன்பு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் கட்டாமலேயே கட்டியதாக கூறப்பட்டது. மேலும் உத்திரமேரூர் ஒன்றிய பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆளும்கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் கூட்டு சேர்ந்து மக்கள் வரிபணத்தை கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். இந்த பிரச்னை குறித்து விசாரிக்க தனிக்குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது

No comments