Disqus Shortname

படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கே கரும்பு : உத்தரமேரூர் பகுதி விவசாயிகள் உறுதி

படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கே கரும்பு வழங்குவது என்று காஞ்சிபுரத்தில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் உத்தரமேரூர் பகுதியைச் சேர்ந்த ஒட்டுமொத்த விவசாயிகளும் கருத்து தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை காமராஜர் ஆட்சி காலத்தில் செயல்படத் தொடங்கியது. பல்வேறு நிர்வாக குளறுபடி காரணமாக இந்த ஆலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இழுத்து மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து வாலாஜாபாத் அருகே செயல்படும் தனியார் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் கரும்பை வழங்கினர்.
இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் பகுதி விவசாயிகள் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும்,  உத்தரமேரூர், சீத்தனஞ்சேரி, வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் தனியார் சர்க்கரை ஆலைக்கும் கரும்பு சப்ளை செய்ய வேண்டும் என்று சர்க்கரை துறை ஆணையம் அறிவித்தது. இதற்கு உத்தரமேரூர் பகுதி விவசாயிகளிடையே எதிர்ப்பு கிளம்பியது.
உத்தரமேரூர் பகுதி விவசாயிகள் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குத்தான் தாங்கள் விளைவித்த கரும்புகளை வழங்குவது என்று சர்க்கரை துறை ஆணையருக்கு மனு அளித்தனர். படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் உத்தரமேரூர் பகுதி விவசாயிகளிடம் தாங்கள்தான் கரும்பு கொள்முதல் செய்வோம் என்று வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் விவசாயிகள் சிலர் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி விவசாயிகளிடையே கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு சர்க்கரைத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் அன்னை அஞ்சுகம் அரங்கில் கரும்பு விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது. சர்க்கரைத்துறை ஆணையர் மகேசன் காசிராஜன் தலைமை வகித்து கூட்டத்தை நடத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் சௌரிராஜன், வேளண் இணை இயக்குநர்கள் பழனிவேலு, சீத்தாராமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து பயிர் சாகுபடி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். தனியார் சர்க்கரை நிர்வாகிகள், படளாம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் அப்பாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தின் போது, ஒவ்வொரு விவசாயிகளும் தங்களது கருத்தை பதிவு செய்யும் வகையில் அனைவருக்கும் ஒரு படிவம் வழங்கப்பட்டது. அந்த படிவத்தை 265 விவசாயிகள் பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் வழங்கினர். இதில் ஓரிரு விவசாயிகளைச் தவிர ஒட்டு மொத்த விவசாயிகளும் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கே கரும்பு வழங்குவது என்று தெரிவித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு விவாசயிகள் சங்க செயலாளர் நேரு பேசியது: படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உத்தரமேரூர் பகுதியைச் சேர்ந்த 3,200 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களது பங்குத் தொகையாக மட்டும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ. 1.5 கோடி பணம் உள்ளது. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உறுப்பினராக இருக்கும் அங்கத்தினரிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்ய முடியாது என்று கூறுவது சட்டப்படி தவறு. மேலும் மத்திய அரசலால் நியமிக்கப்பட்ட ரங்கராஜன் குழு, கரும்பு விவசாயிகள் குறிப்பிட்ட ஆலைக்குதான் கரும்பை விற்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது என்று கூறியுள்ளது.
மேலும் கடந்த ஓராண்டாக பழைசீவரம் தனியார் சர்க்கரை ஆலை ரூ. 14.5 கோடி அளவுக்கு விவசாயிளுக்கு பாக்கி தர வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன், பயிர்கடனை திரும்ப அடைக்கும்படி கூட்டுறவு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இது போன்ற நிலை கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருக்காது. மேலும் 1 டன் கரும்புக்கு 1 கிலோ சர்க்கரை இனாம் கிடைக்கும். ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்படும். சர்க்கரை தவிர எத்தனால் உள்ளிட்ட பொருட்களுக்கும் விவசாயிகளுக்கு பங்கு கிடைக்கும். ஆனால் தனியார் ஆலைகளில் இந்த வசதி இல்லை. எனவே உத்தரமேரூர் கரும்பு விவசாயிகளை படாளம் சர்க்கரை ஆலையுடன் இணைக்க வேண்டும் என்றார்.
இதே போன்ற கருத்தை அனைவரும் தெரிவித்தனர். கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் அப்பாதுரையும், உத்தரமேரூர் பகுதி விவசாயிகளின் கரும்பை முழுமையாக கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். அதே நேரம் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மட்டும் கரும்பு தங்களிடம்தான் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கியது.
இது குறித்து சர்க்கரைத்துறை ஆணையர் மகேசன் காசிராஜன் கூறுகையில், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நடந்த வாதம், விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்து மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

No comments