Disqus Shortname

திருப்புலிவனம் அரசுக் கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் அக் 16,
உத்தரமேரூர் அருகே திருப்புலிவனத்தில் புதிதாகக் கட்டுப்பட்டு வரும் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை ஆட்சியர் இரா. கஜலெட்சுமி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
உத்தரமேரூர் அருகே திருப்புலிவனத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இக்கல்லூரி கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் உத்தரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், இக்கல்லூரிக்கென திருப்புலிவனத்தில் 10 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 7.98 கோடி மதிப்பில் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. புதிதாகக் கட்டப்பட்டு வரும் இக்கல்லூரியில் 15 வகுப்பறைகள், 2 கூட்ட அரங்குகள், முதல்வர் அறை, துறைத் தலைவர்கள் அறை, நூலகம், அறிவியல் கூடங்கள், பணியாளர் அறை, இருப்பு அறை, கழிப்பறை வசதிகள் ஆகியன உள்ளன.
தற்போது கட்டடத்தில் வர்ணம் பூசும்பணி நடைபெற்று வருகிறது. விரைவில் திறக்கப்பட உள்ள இந்த கல்லூரி கட்டுமானப் பணிகளை ஆட்சியர் இரா. கஜலெட்சுமி ஆய்வு செய்து, நேர்த்தியான முறையில் உரிய காலத்தில் கட்டடப் பணிகளை முடித்து ஒப்படைக்கும்படி ஒப்பந்ததாரரிடம் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்டத் திட்ட அலுவலர் முத்துமீனாள், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் மரகதம் குமரவேல், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மொளச்சூர் இரா.பெருமாள், ஒன்றியக்குழுத் தலைவர்கள் கமலக்கண்ணன், வரதராஜுலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments