Disqus Shortname

ரூ.24 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு

உத்தரமேரூர்அக்.23:
  உத்தரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒரக்காட்டுப்பேட்டையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.கஜலெட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒரக்காட்டுப் பேட்டையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ.24 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப் பணிகளை ஆய்வு செய்தபின் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலெட்சுமி நிருபர்களிடம் கூறியது:
ஒரக்காட்டுப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்படும் இந்தப் பாலம் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சுமார் 260 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் உள்ள இந்தப் பாலம் ஆற்றின் குறுக்கே 18 தூண்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. 
கடந்த 10 மாதங்களில் சுமார் 45 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளன. உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது பணி மேற்கொள்ளும் பணியாளர்களுடன் கூடுதல் பணியாளர்களை நியமித்து  மேம்பாலம் கட்டும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
மேலும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியின் நிலை குறித்தும், முன்னேற்றம் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை அளிக்கும்படி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வின்போது உத்தரமேரூர் எம்எல்ஏ வாலாஜாபாத்பா.கணேசன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் எச்.ரமேஷ், உதவிக் கோட்டப் பொறியாளர் சசிகலா, மாவட்ட ஊராட்சித் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றியக் குழுத் தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

No comments