Disqus Shortname

கூலிப்படையை ஏவி தந்தை கொலை மகன் உட்பட நான்கு பேர் கைது

உத்திரமேரூர்செப். 30:
சாலவாக்கம் அருகே, சாலையோரம் இறந்து கிடந்த விவசாயியை, அவரது மகன், கூலிப்படை வைத்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவரது மகன் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், பிலாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம், 60; விவசாயி. இவர், கடந்த, 27ம் தேதி காலை, 6:00 மணிக்கு, சாலவாக்கம் அடுத்த, காவூர் - பிலாப்பூர் இணைப்பு சாலை பகுதியில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சாவில் மர்மம்

தகவலறிந்த சாலவாக்கம் போலீசார், சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், பஞ்சாட்சரத்தின் சாவில் மர்மம் உள்ளதாக, அவரது மகன் சரவணன், 32, அளித்த புகாரையடுத்து, சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், பிரேத பரிசோதனையில், பஞ்சாட்சரம் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த விசாரணையில், பஞ்சாட்சரத்தை அவரது மகன் சரவணன் கூலிப்படை வைத்து கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. போலீசாரின் விசாரணையில் சரவணன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்: பஞ்சாட்சரம் அதே பகுதியில், பெண் ஒருவரோடு நெருக்கான உறவு வைத்திருந்தார். இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

கட்டையால் தாக்கி...

அதன்படி, கடந்த, 26ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, ஆள் நடமாட்டம் இல்லாத சாலை பகுதியில், பஞ்சாட்சரம் நடந்து வந்த போது, அவரை வழிமறித்து, கூலிப்படையினருடன் சேர்ந்து, கட்டையால் தாக்கி கொலை செய்தேன். இவ்வாறு சரவணன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சரவணன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 59, செங்கல்பட்டு அடுத்த, திம்மாவரம் பகுதியைச் சேர்ந்த டேவிட், 27, பழத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், 26,
ஆகிய நான்கு பேரை போலீசார், நேற்று கைது செய்து, உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்
படுத்தி, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர்

No comments