Disqus Shortname

பருத்திக்கொல்லை பகுதியில் ரேஷன் கடையை திறந்து பொருள் வினியோகிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூர்:
உத்திரமேரூர் அடுத்த பருத்திக்கொல்லை பகுதியில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் அப்பகுதியில் ரேஷன் கடை இல்லாததால் சுமார் 2 கி.மீ. நடந்து சென்று ரேஷன் பெருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் இவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்ததன்பேரில் கடந்த 6-4-2015 அன்று சுமார் ரூ. 7.25 லட்சம் மதிப்பில் பருத்திக்கொல்லை பகுதியில் ரேஷன் கடை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதன்மூலம் பருத்திக்கொல்லை, பட்டாங்குளம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பயன்படுவர் என கூறப்பட்டது.ஆனால் இந்த கட்டிடம் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் வழக்கம் போல் சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள ஆர்.பி. சத்திரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று அங்கு ரேஷன் பொருட்களை வாங்கி சைக்கிள் மற்றும் தலையில் சுமந்து வரும் அவல நிலை தொடர்கிறது.

இதுகுறித்து பலமுறை ரேஷன் ஊழியர்களிடம் கேட்டபோதும், விரைவில் பொருட்கள் இறக்கப்பட்டு ரேஷன் கடை பயன்பாட்டிற்கு வரும் என கூறி வருகின்றனர். மேலும் இந்த கட்டிடமானது தொடர்ந்து பயன்பாட்டிற்கு வராமல் இருந்தால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் நிலை ஏற்படும். எனவே, விரைவில் இக்கடையில் ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ‘பருத்திக்கொல்லை பகுதியில் ரேஷன் கடை எண்ணிக்கைக்காக கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு பின்னர் இதுவரை திறக்கப்படவில்லை, ரேஷன் பொருட்கள் விற்கப்படவும் இல்லை. ரேஷன் கடை இருந்தும் நாங்கள் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று பொருள் வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது. ஆகவே, இந்த பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி ரேஷன் கடையில் பொருட்கள் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments