Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பள்ளி வளாகத்தில் கோயில் கட்ட முயற்சி தடுத்து நிறுத்திய தாசில்தார்

உத்திரமேரூர் அக் 17, :  உத்திரமேரூர் அருகே உள்ள சாத்தனஞ்சேரி கிராம மக்களில் ஒரு பிரிவினர், அங்குள்ள அரசு பள்ளி வளாகத்தில் திடீரென கோயில் கட்ட முயற்சி செய்தனர். தகவல் அறிந்த தாசில்தார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, கொட்டகையை அகற்றினார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.உத்திரமேரூர் அடுத்த சாத்தனஞ்சேரி கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த  150 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த பள்ளி வளாகத்தில் பஜனை கோயில் ஒன்று இருந்ததாகவும், பின்னர் அது சிதிலமடைந்து போனதாகவும், கிராம மக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் கோயில் இருந்த இடத்தில் பள்ளிக்கான கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு விட்டதாக கிராம மக்களில் ஒரு தரப்பினர்கூறி வருகின்றனர். இதற்காக அவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள அந்த சர்ச்சைக்குள்ளான இடத்தில்,  கோயில் கட்டுவதாக கூறி நேற்று திடீரென கொட்டகை அமைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு தரப்பினருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த உத்திரமேரூர் தாசில்தார் ஹரிதாஸ் மற்றும் சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, கொட்டகையை அகற்றினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

No comments