Disqus Shortname

உத்தரமேரூர் அடுத்த பெருநகரில் கிராமசபா கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ப்பு

உத்தரமேரூர் ஜீன்,01
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பை வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பலப்படுத்த வேண்டும் என்று ஆட்சியர் கா. பாஸ்கரன் உத்தரவிட்டார்.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
 வழக்கமாக மே 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மே 1-ஆம் தேதி தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால், அப்போது கிராம சபைக் கூட்டம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
 எனவே மே 1-ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
 அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
 காஞ்சிபுரம் அருகே உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம் பெருநகரின் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் கா. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
 இதில் கலந்து கொண்ட ஆட்சியர் பொதுமக்களிடம் இருந்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியது:
 மாவட்டம் முழுவதும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க நிலத்தடி நீரை உயர்த்துவது அவசியம். அந்த வகையில் வரும் பருவமழையின்போது மழை நீரை வீணாக்காமல், சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள், அரசுக் கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை பலப்படுத்த வேண்டும்.
 மேலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு குறித்து மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். வரும் 2015-ஆம் ஆண்டுக்குள் திறந்தவெளி கழிப்பிடத்தை முற்றிலும் தடுக்க வேண்டும். அதற்காக தனிநபர் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
 பயன்பாட்டில் இல்லாத, ஆழ்துளை கிணற்றை மூட நடவிடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக ஆழ்துளை கிணறு போட சம்மந்தப்பட்ட ஊராட்சிகளில் அனுமதி பெற வேண்டும்.
 பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் கா. பாஸ்கரன்.
 குடிநீர் ஆதாரத்துக்கு இடையூறாக உள்ள கருவேல மரங்களை நீக்க இந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 இக்கூட்டத்தில், உத்தரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா. கணேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கமலக்கண்ணன், பெருநகர் கிராம ஊராட்சித் தலைவர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து
 கொண்டனர்.

No comments