Disqus Shortname

உத்தரமேரூரில் கால்நடைகள் உலர் தீவன மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது

உத்தரமேரூர் மே 04

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் புதிதாக கால்நடை உலர் தீவன மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கடும் வறட்சி நிலவியது. போதிய அளவு மழை பெய்யாததால், கால்நடைகளுக்கான இரைகளுக்குகூட கடும் தட்டுப்பாடு நிலவியது. இதனால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கடும் அவதிக்குள்ளானார்கள். கால்நடைகளுக்கான உலர் தீவனமான வைக்கோல் ஒரு கட்டு ரூ. 15 முதல் ரூ. 25 வரை ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விலையில் விற்பனை செய்யப்பட்டது.
கால்நடைகளுக்கு ஏற்பட்ட தீவன பற்றாக்குறை மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் அரசே நேரடியாக உலர் தீவன மையங்களை திறந்து ஒரு கிலோ ரூ. 2-க்கு விற்பனை செய்ய முடிவு செய்தது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐயன்பேட்டை, நந்திவரம், மதுராந்தகம், சிட்லப்பாக்கம் ஆகிய 4 இடங்களில், உலர் தீவன மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இது கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இந்த மையங்களை மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து உத்தரமேரூர் கால்நடை மருந்தகத்தில், உலர் தீவன மையம் திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த மையம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக ஆட்சியர் கா. பாஸ்கரன் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்தார்.
உத்தரமேரூர் மட்டுமின்றி, மாவட்டத்தில் எங்கெல்லாம் கால்நடை மருத்துவமனைகள், துணை கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படுகின்றனவோ அங்கெல்லாம் உலர் தீவன மையங்களைத் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments