Disqus Shortname

அரசு பள்ளியில் சான்றிதழ் வழங்க கட்டாய வசூல் பெற்றோர் புகார்

உத்தரமேரூர் ஜீன்,13

 உத்திரமேரூர் அடுத்த பெருநகரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பெருநகர், இளநகர், அகஸ்தீயப்ப நகர், சேத்பட்டு, அத்தி, இளநீர் குன்றம், தேநீர் குன்றம், மேல்பாக்கம், அனுமந்தண்டலம், அழிசூர், கூழமந்தல், வெள்ளாம்மலை, ஆக்கூர், மேல்மா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 1000க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நேற்று சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் சான்றிதழ் வழங்குவதற்காக பல்வேறு வழியில் பள்ளி நிர்வாகம் கட்டாய பணம் வசூலிக்கிறது. இதில் சான்றிதழ் வழங்குவதற்கான படிவம் ரூ5, மேல் வகுப்பிற்கு பயில்வதற்கான சான்றிதழ் படிவம் ரூ20, மாற்று சான்றிதழ் (டிசி) பெறுவதற்கு ரூ10ம், வேலை வாய்ப்பு அலுவலக பதிவுக்கு ரூ25, கொடி நாள் ரூ50 என மாணவர்களிடம், பள்ளி நிர்வாகம் கட்டாயமாக பணத்தை வசூலித்தது.
கல்வி உதவி தொகை வழங்கி மாணவ, மாணவிகள் இடைநிலை நிறுத்தம் செய்யாமல் இருக்க, அரசு நடவடிக்கை எடுத்து வரும் இந்த காலத்தில், அரசு பள்ளி நிர்வாகம் இதுபோல் மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் கட்டாய பண வசூல் செய்வது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், எங்கள் பிள்ளைகள் படிப்பை முடிந்து சான்றிதழ் வாங்குவதற்காக பள்ளிக்கு வந்தோம். ஆனால், சான்றிதழ் வாங்க வந்த ஒவ்வொருவரிடமும் சுமார் ரூ150 வரை வசூலிக்கிறார்கள். ஏன் என கேட்டதற்கு, பல்வேறு காரணங்களை கூறுகின்றனர் என்றனர்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாலமோகனிடம் கேட்டபோது, நாங்கள் கொடிநாளுக்கான பணம் மட்டும் வசூல் செய்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் பணம் வசூலிப்பதில்லை. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்.

No comments