Disqus Shortname

மருத்துவர்களைத் தாக்கியதாக 3 பேர் கைது

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மூதாட்டி இறந்தது தொடர்பாக அரசு மருத்துவர்களைத் தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு நத்தம் வேதப்பர் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஹெலன் பிரேமா (70) என்பவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்தார். சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களின் காலதாமதம் காரணமாகவே மூதாட்டி இறந்ததாக அவரது உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் போலீஸாரின் சமாதான பேச்சுக்குப் பிறகு சடலத்தை உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.
 இதனையடுத்து மருத்துவர் தாக்கப்பட்டதாகக் கூறி பயிற்சி மருத்துவர்கள், நர்சுகள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களாக மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்கள் பணிக்குச் செல்லாமல் புறக்கணித்து கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தங்கள் மீது மருத்துவர்கள் புகார் கொடுத்ததை அறிந்த உறவினர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சட்டக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் தொடர் போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நோயாளிகளின் நலன் கருதியும், மருத்துவர்களைத் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்து நத்தம் பாசி தெருவைச் சேர்ந்த சுதாகர் பிரேம்குமார் (40), நேதாஜி நகரைச் சேர்ந்த புஷ்பராஜ் (33), உத்தரமேரூர் ஏ.பி.சத்திரத்தைச் சேர்ந்த சுரேஷ் (28) ஆகிய 3 பேரை வியாழக்கிழமை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 3 பேரையும் 15 நாட்கள் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

No comments