Disqus Shortname

உத்திரமேரூர் செல்ல நேரடி பஸ் வசதி; 20 ஊராட்சி மக்கள் கோரிக்கை

உத்திரமேரூர்ஆக,27 : 

உத்திரமேரூர் செல்ல நேரடி போக்குவரத்து வசதி இல்லாததால், சாலவாக்கம் அருகே உள்ள, 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பகுதிவாசிகள், கூடுதலாக, 25 கி.மீ., துாரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது.

உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்து, சிறுதாமூர், சிறுமையிலுார், மதுார், திருமுக்கூடல், பழவேரி, பினாயூர், அரும்புலியூர், குருமஞ்சேரி, சாத்தணஞ்சேரி, களியப்பேட்டை, காவித்தண்டலம், ஒரக்காட்டுபேட்டை, திருவானைக்கோவில் உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில் உள்ள கிராமவாசிகள், உத்திரமேரூர் நகரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம், சார் --- பதிவாளர் அலுவலகம், வேளாண்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகள் காரணமாக தினசரி சென்று வருகின்றனர். உத்திரமேரூர் செல்ல பேருந்து வசதி இல்லாததால், இப்பகுதிகளை சேர்ந்த மக்கள், 25 கி.மீ., துாரத்தில் உள்ள செங்கல்பட்டு அல்லது காஞ்சிபுரம்ஆகிய நகர்களுக்கு சென்று, அங்கிருந்து பேருந்து பிடித்துதான் உத்திரமேரூர் செல்ல வேண்டும் என்ற நிலை நீண்ட நாட்களாக உள்ளது.

இதுகுறித்து, அரும்புலியூர் கிராம மக்கள் கூறுகையில், 'உத்திரமேரூருக்கு பேருந்து வசதி இல்லாததால், குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகங்களுக்கு செல்ல முடியவில்லை. மேலும், போக்குவரத்து பிரச்னையால், உத்திரமேரூரில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு கல்லுாரியில் இப்பகுதி மாணவர்கள் சேர இயலாத நிலை உள்ளது. எனவே, இப்பகுதிகளைச் சேர்ந்த பகுதிவாசிகள், உத்திரமேரூர் செல்ல நேரடி போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

No comments