Disqus Shortname

ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கொலை: 2 பேரை பிடித்து விசாரணை

உத்திரமேரூர் ஆக.2–
செஞ்சியை அடுத்த மருதேரி ஏரிகரையில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு கழுத்தறுபட்ட நிலையில் ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார்.
செஞ்சி போலீசார் அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் (வயது 25) என்று தெரியவந்தது.அவரது நண்பரும், இரு சக்கர வாகன மெக்கானிக்குமான அசோக்குமார் (25) காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். கொடுங்கையூரை சேர்ந்த பாட்ஷா என்பவரது கொலை வழக்கில் அசோக்குமார் சம்பந்தப்பட்டவர் என்று தெரிய வந்தது.
எனவே அசோக் குமாரையும், சுரேசையும் ஒரே கும்பல் கொலை செய்து வெவ்வேறு பகுதிகளில் உடலை வீசி விட்டு தப்பியதாக சந்தேகித்தனர்.
கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கும் படி செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில்ஒரு தனி படையும், சப்– இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் மற்றொரு தனிபடையும் அமைக்கப்பட்டது.
இதில் ஒரு தனிபடை அசோக்குமார் உடல் மீட்கப்பட்ட உத்திரமேரூருக்கு நேற்று புறப்பட்டு சென்றது. மற்றொரு தனி படை கொடுங்கையூருக்கு விரைந்தது. இந்த 2 பகுதிகளிலும் தனிபடை போலீசார் முகாமிட்டுள்ளனர்.
கொடுங்கையூரை சேர்ந்த பாட்ஷா கொலை வழக்கில் அசோக்குமார் சம்பந்தப்பட்டிருப்பதால் பழிக்கு பழியாக அவரும், உடன் சென்ற சுரேசும் தீர்த்து கட்டப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
அதன்பேரில் பாட்ஷா கூட்டாளிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டு மாவட்ட போலீசாரும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். பலியானவர்களின் சொந்த ஊரான வண்ணாரபேட்டை, கொடுங்கையூர் பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் விசாரணையில் கொலையாளிகள் அடையாளம் தெரிந்துள்ளது. கொடுங்கையூர் ஆட்டோ டிரைவர் பாட்ஷா கொலை வழக்கில் சிக்கிய அசோக்குமாரும் அவரது கூட்டாளிகளும் ஜெயிலில் இருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஜெயிலில் இருந்து விடுதலையானதும் நண்பர்கள் எதிரிகளாக மாறி விட்டனர். 4 பேர் ஒரு கோஷ்டியாகவும் கொலையுண்ட அசோக் குமார், சுரேஷ் ஆகிய இருவரும் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டுள்ளனர்.
இருவரும் இன்னொரு கோஷ்டிக்கு ஆதரவாகவும் செயல்பட்டுள்ளனர். இதனால் அவர்களை தீர்த்து கட்ட எதிர்கோஷ்டியினர் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் தங்கள் கொலை திட்டத்தை வெளியே காட்டி கொள்ளாமல் ஜாலியாக மது குடித்து விட்டு வரலாம் என்று அழைத்து சென்றுள்ளனர். உத்திரமேரூர் அருகே வைத்து அசோக்குமாரை கொலை செய்துள்ளனர். அதை பார்த்ததும் சுரேஷ் அதிர்ச்சி அடைந்து ‘‘அவன் நமது நண்பன்தானடா ஏன் கொன்றீர்கள்’’ என்று சண்டை போட்டுள்ளார்.
எங்களுக்கு எதிராக செயல்பட்ட நீங்கள் இருவருமே ஒழிய வேண்டும். உன்னையும் கொல்லத்தான் போகிறோம் என்று அங்கிருந்து சுரேசை காருக்குள் தூக்கி போட்டு செஞ்சி அருகே கொலை செய்து ஏரிக்கரையில் பிணத்தை வீசி இருக்கிறார்கள்.
இந்த கொலை வழக்கில் 6 பேர் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
அவர்களிடம் விசாரித்த போதுதான் கொலையாளிகள் பற்றிய விவரமும் கொலைக்கான காரணமும் தெரிய வந்தது. கொலையாளி 6 பேரும் இன்னும் சில தினங்களில் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

No comments