Disqus Shortname

உத்தரமேரூர் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலத்தை குழுவினர் ஆய்வு செய்தனர்.

 உத்திரமேரூர் ஜன, 07:
தமிழகத்தின் வெள்ளச் சேதம் குறித்த அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும்' என்று மத்தியக் குழுத் தலைவரும் மத்திய உள்துறை இணைச் செயலருமான டி.வி.எஸ்.என்.பிரசாத் தெரிவித்தார்.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என்.பிரசாத், நிதித்துறை இயக்குநர் எம்.எம்.சச்தேவ் ஆகியோர் புதன்கிழமை காஞ்சிபுரம் வந்தனர். தமிழக அரசு முதன்மை செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான அதுல்ய மிஸ்ராவும் உடன் வந்திருந்தனர்.
 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மத்தியக் குழுவினர் அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், குழுவினர் காமாட்சி அம்மன் ஆலயத்துக்கு சென்று அம்மனை தரிசித்தனர்.
 இதனைத் தொடர்ந்து, உத்தரமேரூர் தொகுதிக்கு உள்பட்ட காஞ்சிபுரம் - உத்தரமேரூர் சாலையில் உள்ள வெங்கச்சேரி அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலத்தை குழுவினர் ஆய்வு செய்தனர்.
 ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் செளரிராஜன், உத்தரமேரூர் எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 பின்னர், மத்தியக் குழுத் தலைவர் டி.வி.எஸ்.என்.பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டாவது முறையாக பெய்த மழையின்போது பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்திலும் வெள்ளச் சேதங்களை பார்வையிட்டுள்ளோம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது. வெள்ளச் சேதம் குறித்த அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும் என்றார்.
 அப்போது, மாவட்ட ஆட்சியர் இரா.கஜலெட்சுமி, "காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சுமார் ரூ.1,687 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழுவினர் பூவிருந்தவல்லி ஒன்றியத்துக்கு உள்பட்ட காட்டுப்பாக்கத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், சாலைகள் ஆகியவற்றைப் பார்வையிட்டனர். அங்கு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
 பின்னர், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த டெங்கு விழிப்புணர்வு முகாமைப் பார்வையிட்டு அங்கு வழங்கப்பட்ட நிலவேம்புக் குடிநீரை பருகினர்.
 மேலும், சென்னீர்குப்பம் ஊராட்சிக்குள்பட்ட காடுவெட்டியில் தாற்காலிகமாக புதுப்பிக்கப்பட்ட பாலத்தைப் பார்வையிட்டனர்.
 தொடர்ந்து, பூண்டியை அடுத்த நாராயணபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும், சேதமடைந்த நெற்பயிர்களையும் பார்வையிட்டு, அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
 அப்போது, டி.வி.எஸ்.என்.பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த சேதங்களில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்காக தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் திருப்திகரமாக உள்ளன. இச்சூழ்நிலையில் இருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்ப மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்' என்றார்.

No comments