Disqus Shortname

தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி

உத்திரமேரூர் 22;
 மாணவர்கள் தகவல் தொழில்நுட்ப வசதிகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி அறிவுறுத்தினார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர், பாப்பான்குளம் பகுதியில் உள்ள அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு, பயிற்சி துறையின் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி தொடங்கி வைத்து பேசியதாவது: 
 தகவல் தொழில்நுட்ப வசதிகளை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் இலக்கை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இலக்கை அடைய குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு தங்களை சுயபரிசோதனை செய்து செயல்படுத்த வேண்டும். சமுதாயத்தில் வெற்றி பெற்ற அனைத்து சாதனையாளர்களும் காலம் தவறாமை, கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை உடையவராக இருந்து வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்களின் குறிக்கோளை அடைய விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்.

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1, குரூப்-2 தேர்வுகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகளில் அதிகமானோர்  தேர்ச்சி பெறுவது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான்.

 வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளும், படிப்பதற்குத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியும், கருத்தரங்குகளும் நடத்தப்படுகின்றன. போட்டித் தேர்வுகள் மூலமான வேலைவாய்ப்பு குறித்தும், சுய வேலைவாய்ப்புகள் குறித்தும் அனுபவமுள்ள அரசு அலுவலர்களைக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

 மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, பல்வேறு வகையான உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அரசு வழங்குகிறது. மாவட்ட தொழில் மையம் மூலம் 179 நபர்களுக்கு ரூ. 1.32 கோடி கடன் உதவியும், 26 நபர்களுக்கு ரூ. 3.46 கோடி மதிப்பில் 25 சதவீத மானியத்துடன் கடனும் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் திட்டம் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அரசு வழங்கும் வாய்ப்புகளை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

 வேலைவாய்ப்பு துறை சென்னை மண்டல இணை இயக்குநர் வே.மீனாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர் ஆர்.கோவிந்தராசு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் அ.கு.சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments